வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.. உயிரிழந்தால் ரூ. 4 லட்சம் நிவாரணம்!
சென்னை: வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க, மாநில பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதேசமயம் சில இடங்களில் வறட்சியான வானிலையால் மிக வேகமாக தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. மேலும், பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

சமீப காலமாக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் , பொதுமக்களும் வெப்ப அலையில் சிக்கி பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், வெப்ப அலை காரணமாக சில இடங்களில் மக்கள் உயிரிழப்பும் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
அண்மையில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது, கடும் வெப்பத்தால் பலரும் மயக்கமடைந்தனர், 5 பேர் உயிரிழந்தனர். இதற்கு வெப்ப அலையும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில், வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க, மாநில பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக அறிவிக்கப்படுகிறது. வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். தண்ணீர்ப் பந்தல் அமைத்துக் குடிநீர் வழங்கப் பேரிடர் நிதியைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய நேரத்தில் வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை இணைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதிக அளவு பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதற்காக உப்பு சர்க்கரை கரைசல் (ORS) வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பல இடங்களில் குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications