கருப்பு பூஞ்சையிலும் தமிழக அரசு கவனம்.. ' ஆம்போடெரிசின் பி' மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு!
சென்னை: தமிழக அரசின் கடும் நடவடிக்கையால் கொரோனா தொற்று ஒரு வழியாக கட்டுக்குள் வர தொடங்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 36,000-ஐ கடந்து சென்ற நிலையில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 20,000-க்குள் அடங்கி இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருக்க கருப்பு பூஞ்சை நோயும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 921 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இதுவரை ரூ.280.20 கோடி நிவாரண நிதி
தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்குக் கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க (7-6-2021) வரை 280.20 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஆணை
இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாகக் கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிட முதலமைச்சர் ஏற்கனவே ஆணையிட்டு இருந்தார்.

2-வது கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு
இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.

ஆம்போடெரிசின் பி மருந்து வாங்க..
இதனையடுத்து சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார். தற்போது கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் பி உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications