தமிழகத்தில் மோசமான நிலைமை.. நெல் – அரிசி – பருப்பு வைத்து கொள்ள திடீர் கட்டுப்பாடு! பின்னணி
சென்னை: தமிழகத்தில் அரிசி, பருப்பு, நெல் விலைகள் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய நெல், அரிசி, பருப்புகளை இருப்பு வைக்க அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பி அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

நெல் அல்லது அரிசியை மொத்தமாக விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் அதிகபட்சமாக 2 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நெல் அல்லது அரிசியை இருப்பு வைக்கலாம். சில்லரை விலைக்கு விற்பனை செய்வோர் ஒவ்வொரு கடையிலும் அதிகபட்சமாக 8 மெட்ரிக் டன் வரை இருப்பு வைக்கலாம்.
பெரிய சில்லரை செயின் கடைகளும் (Big Chain Retail Shop) 8 மெட்ரிக்ன டன் வரை தங்களின் கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைத்து கொள்ளலாம். அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் ஒரு மாத உறபத்தி திறனுக்கு மிகாமல் இருப்பு வைத்து கெள்ள வேண்டும். இந்த கட்டுப்பாடு 2027 ஜனவரி மாதம் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
அதேபோல் துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்டவற்றை மொத்த விற்பனையாளர்கள் 200 மெட்ரிக் டன் வரை ஒவ்வொன்றையும் இருப்பு வைக்கலாம். சில்லரை விற்பனையாளர்கள் என்றால் ஒவ்வொன்றையும் 5 மெட்ரிக் டன் வரையும், பெரிய சில்லரை செயின் கடைகள் என்றாலும் ஒவ்வொன்றையும் 5 மெட்ரிக் டன் வரையும், குடோன்கள் என்றால் 200 மெட்ரிக் டன் வரையும் இருப்பு வைக்கலாம். இந்த கட்டுப்பாடு அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
இந்த பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் அல்லது நபர்கள் என்றால் அவர்கள் சுங்க அனுமதி பெற்ற 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்த பொருட்களை இருப்பு வைக்க கூடாது. நிர்ணயித்த அளவை விட அதிகமாக இருப்பு வைத்துள் நிறுவனங்கள் நவம்பர் 16ம் தேதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இருப்பை குறைக்க வேண்டும்.
மேலும் நெல்/அரிசி, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றின் இருப்பு விவரங்களை மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் fcainfoweb.nic.in இணையதளங்களத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்'' என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் பணவீக்கம் தான். இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் 7.29% அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் டேட்டா கூறியது. இதனால் தமிழகத்தில் பொருட்களின் விலையேற்றம் நடந்து வருகிறது.
இந்த விலையேற்றத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க பலரும் அரிசி, பருப்புகளை பதுக்கி விற்பனை செய்ய முயற்சிக்கலாம். இப்படி செய்தால் பொதுமக்களுக்கு முறையாக அரிசி, பருப்புகள் கிடைக்காது. அதோடு இன்னும் கூடுதல் விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய சூழல் வரும். இதனை தடுக்கவே தமிழக அரசு சார்பில் மாநிலத்தில் நெல், அரிசி, பருப்பு, உளுந்து உள்ளிட்டவற்றை சேமித்து வைப்பதற்கு கட்டுப்பாடு விதித்து உச்சவரம்புகளை தனித்தனியாக நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
