அடுத்த அதிரடி.. தமிழ்நாடு மின்சார கணக்கீட்டு முறையில் வரும் மாற்றம்.. மின் வாரியம் ‛மாஸ்’ மூவ்!
சென்னை: தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின்கணக்கீட்டு முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் மின்சாரத்துறையில் அவ்வப்போது புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் மின்கணக்கீடு செய்வதில் தான் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. முதலில் பரீட்சார்த்த அடிப்படையிலும் அதன்பிறகு மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றிய விபரம் வருமாறு:
தமிழ்நாட்டில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவை மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்மீட்டரை பார்த்து கணக்கிட்டு வருகின்றனர். அதன்படியே நாம் அனைவரும் மின்கட்டணம் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் இந்த கணக்கீட்டு முறையில் தான் தற்போது மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின்சார பயன்பாட்டின் அளவை துல்லியமாக கணக்கீட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 'ஸ்மார்ட் மீட்டர்' இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது நல்ல பலனை கொடுத்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (திங்கட் கிழமை) ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்படுகிறது. மொத்தம் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதல்கட்ட திட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தருமபுரி உள்பட தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பட்டு வரும். அதன் பிறகு 2வது மற்றும் 3வது கட்ட திட்டத்தில் பிற மாவட்டங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. 3-வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். இதில் முதற்கட்ட திட்டத்துக்காக 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், 2ம் கட்ட திட்டத்துக்காக 1 கோடியே 2 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், 3ம் கட்ட திட்டத்துக்காக 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளது.
இன்று வெளியாகும் டெண்டர் தொடர்பாக அடுத்த 45 நாட்களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications