பாக்யராஜ்: மூக்குக்கண்ணாடி போட்டாலும் ஹீரோதான்.. ஆபாசம் இல்லாத அடல்ட் காமெடி.. விதியை மாற்றிய கலைஞன்
சென்னை: பாக்யராஜ் என்ற மாமனிதன், தனது அசாத்தியமான மற்றும் சுவாரசியமான திரைக்கதை எழுதும் திறமையால், தமிழ்த் திரையுலகின் "திரைக்கதை மன்னன்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்தைப் பெற்றார். திரைக்கதைக்காக ஒருவர் பட்டம் பெற்றுள்ளார் என்றால், அது நம்முடைய பாக்யராஜ்தான்.. இன்னும் பல அசாத்தியங்களை தன்னுள்ளே ஒளித்து வைத்திருந்தவர் கே.பாக்யராஜ்..!!
பாக்யராஜின் படங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவே அலசி ஆராய்ந்து தூர் வாரலாம்.. அந்த அளவுக்கு குறிப்பிட்டு பேசக்கூடிய விஷயங்கள் அவரது படங்களில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு திரைக்கலைஞராக பார்த்தால், பல ஸ்பெஷாலிட்டிகள் பாக்யராஜிடம் பொதிந்து கிடந்துள்ளன.. அந்த ஸ்பெஷாலிட்டிகளில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

அப்பாவியான சிரிப்பு
சட்டைப் பையில் பேனா, கையில் டைரி, முகத்தில் அப்பாவியான சிரிப்பு என ஒரு சராசரி மனிதனும் சினிமாவில் ஜெயிக்கலாம் என்ற ட்ரெண்டை உருவாக்கியவர் பாக்யராஜ்தான்.
சாதாரண தோற்றம் கொண்டவராலும், மூக்குக் கண்ணாடி அணிந்தவராலும் சினிமாவில் மாபெரும் ஹீரோவாக வெல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை தமிழ் சினிமா ரசிகர்களிடம் விதைத்தவர் பாக்யராஜ் என்பதை உரக்க சொல்லலாம்..
மாஸ் ஹீரோ கிடையாது
எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்திற்குப் பிறகு ரஜினி, கமல் என மாஸ் ஹீரோக்கள் உருவான நேரத்தில், பாக்யராஜ் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையை தேர்ந்தெடுத்தார்... அடித்து துவம்சம் செய்யும் சண்டைக் காட்சிகளோ, அதிரடியான வசனங்களோ இல்லாமல், ரொம்ப ரொம்ப சாதாரண நடுத்தர வர்க்கத்து இளைஞனை ஹீரோவாக்கினார்..
பெரிய சிக்கல்களை திரையில் சொல்வதற்கு பல இயக்குனர்கள் தயக்கம் காட்டுவார்கள்.. ஆனால், பாக்யராஜ் அப்படியில்லை.. மிகப்பெரிய மனித உறவுகளின் சிக்கல்களையும் நகைச்சுவை கலந்து சொல்வதில் இவர் தனிப் பாணியைக் கொண்டிருந்தார். எளிய எதார்த்தமான குடும்பக் கதைகளே பாக்யராஜை மக்கள் மனங்களில் எளிதாக கொண்டுபோய் சேர்த்தது.
விளக்கெண்ணெய்
பக்கம் பக்கமாக வசனங்களை பேசிதான், மக்களின் கைதட்டல்களை பெற வேண்டும் என்பதில்லை.. டயலாக் உச்சரிப்பில் தனக்கென ஒரு தனித்துவமான, எளிய நளினமான பாணியைக் கையாண்டே, பட்டிதொட்டியெங்கும் உள்ள பாமர மக்களைத் தன்பால் ஈர்த்தவர் பாக்யராஜ். "ஏன்டா கைப்புள்ள...", "விளக்கெண்ணெய்" போன்ற நையாண்டி டயலாக்குகள் பாக்யராஜுக்கே உரியவை..
சுட்டித்தனமான நடிப்பும், அசட்டுத்தனமான அப்பாவியான கேரக்டர்கள்தான், பாக்யராஜை ரசிகர்களின் குடும்பத்தில் ஒருவராக மாற்றியது.
பாக்யராஜ், பாரதிராஜா
அன்றைய பத்திரிகைகள் பாரதிராஜா, பாக்யராஜ் இவர்களின் திறமையையும் வெற்றிகளையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, இருவருக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாட்டையும் இடைவெளியையும் ஏற்படுத்த அதிகாகவே முயன்றன... ஆனால், அப்படியொரு இடைவெளியை நெருங்கவிடாமல், தன் குரு பக்தியை கடைசிவரை மிக உறுதியாக கடைப்பிடித்தார் பாக்யராஜ்.
இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.. அன்றைய காலகட்டத்தில், எவ்வளவு திறமையான டைரக்டராக இருந்தாலும் சரி, இளையராஜாவின் இசை என்ற பலத்தை உபயோகித்துத்தான் ஒரு படி மேலான வெற்றியை கொடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இதை உடைத்தது பாக்யராஜ்தான்.
இசையமைப்பில் ஒரு சாதனை
இயக்குநராக தன்னை வெளிப்படுத்திய, சுவர் இல்லாத சித்திரங்கள், மௌனகீதங்கள், எங்க சின்ன ராசா என ஏராளமான படங்களை இளையராஜாவின் உதவியின்றி, மற்ற இசையமைப்பாளர்களோடு கைகோர்த்தே இயக்கினார்... கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன், தீபக், தரண் போன்றோருடன் பணியாற்றி அதில் வெற்றியும் பெற்றார்.. ஒருபடி மேலே சென்று, தன்னுடைய படங்களுக்கும் தானே இசையமைத்தும் சாதித்து காட்டியவர் பாக்யராஜ்.
அடிக்கடி ஏவிஎம் நிறுவனத்துடன் முண்டுகட்டும் இளையராஜாவை சாமர்த்தியமாக சமாளித்து, பாக்யராஜ் முடிச்சுப் போட்ட 'முந்தானை முடிச்சு' படம் ஏவிஎம் சரித்திரத்தில் மட்டுமல்ல, பாக்யராஜின் வாழ்நாள் பிளாக்பஸ்டர் வெற்றியாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தது. படம் பார்க்க வருபவர்களுக்கு முருங்கைக்காய் கட்டு கொடுக்கும் அளவுக்கு இவர்களின் விளம்பர உத்தியும் தனித்துவமாக இருந்ததை இங்கு நாம் பதிவு செய்ய வேண்டி உள்ளது.
தூறல் நின்னு போச்சு
பார்த்தாலே பயப்படும் அளவுக்கு, தமிழக ரசிகர்களின் நெஞ்சில் வில்லனாகி பதிந்து போயிருந்தார் எம்என் நம்பியார்.. அப்படி வில்லனாக பழகிப்போன நம்பியாரை, தூறல் நின்னு போச்சு படத்தில் நல்லதொரு குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க வைத்து, 2வது இன்னிங்ஸை நம்பியாருக்கு உருவாக்கி தந்தார் பாக்யராஜ்.
தமிழ் சினிமாவில் அதுவரை பேசத் தயங்கிய கணவன்-மனைவி இடையேயான அந்தரங்க பிரச்சினைகள், சில்மிஷங்கள், ஈர்ப்புகளைத் தன்னுடைய படங்களில் நளினமாகவும், காமெடியாகவும், யதார்த்தகமாவும் மிக ஜாக்கிரதையாக கையாண்டார்..
அடல்ட் காமெடி
அதாவது ஆபாசமாக தெரியக்கூடிய காட்சிகளையும், குடும்பத்தோடு ரசிக்கும்படியான அடல்ட் காமெடி பாணியில், நாகரிகமான திரைக்கதையாக மாற்றுவதில் பாக்யராஜ்ஜூக்கு நிகர் வேறு யாருமில்லை.
வெறும் படங்களை டைரக்ட் செய்வதுடன் நின்றுவிடாமல், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பர உத்திகளிலும் பாக்யராஜ் முன்னோடியாகவே இருந்தார். உதாரணத்துக்கு முந்தானை முடிச்சு' படத்திற்கு முருங்கைக்காயைப் பயன்படுத்தியதும், சின்ன வீடு படத்தின் போஸ்டர்களிலேயே குறும்புத்தனமான கேள்விகளை எழுப்பியதும் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பேசப்பட்டு, படங்களின் வெற்றிக்கும் வழிவகுத்தன.
திரைக்கதை - பல்கலைக்கழகம்
சுருக்கமாக சொன்னால், பாக்யராஜின் கலகலப்பான காமெடியும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பும், ஒரு சாதாரணக் கதையைக் கூட மசாலா தோசை அளவுக்கு ருசியாக மாற்றிவிடும்.
காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், திரைக்கதை இலக்கணம் மாறாது என்பதை உணர்த்தி, இன்றைய தலைமுறை இயக்குநர்களுக்கும் கதை சொல்லலின் நுணுக்கங்களையும், நுட்பங்களையும் கற்றுத்தரும் பல்கலைக்கழகமாக, தமிழ்த் திரையுலகின் வழிகாட்டியாக என்றும் திகழ்வார் நம்முடைய கே. பாக்யராஜ்...!!!












Click it and Unblock the Notifications