தமிழக அரசு சொந்த வரி வருவாய் ரூ.1.92 லட்சம் கோடி.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை: 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால், இம்முறை பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. அதற்கேற்ப அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதற்கேற்ப பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம், நெடுஞ்சாலை துறை, உள்கட்டமைப்பு என்று பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், 2024-2025ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1,95,173 கோடி மதிப்பிடப்பட்டது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் ரூ.1,92,752 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,20,895 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வணிகவரிகளின் கீழ் ரூ.1,63,930 கோடியாகவும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் ரூ.26,109 கோடியும், வாகனங்கள் மீதான வரிகளின் கீழ் ரூ.13,441 கோடியும் மற்றும் மாநில ஆயத்தீர்வையின் கீழ் ரூ.12,944 கோடி வரி வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும்.
மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், வரி வசூல் திறனில் முன்னேற்றம் ஆகியவற்றின் பலனாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025-26 ஆம் ஆண்டில் 14.60 சதவீத வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.30,728 கோடியாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் ரூ.28,124 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் ரூ.28,819 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான ரூ.2,49,713 கோடி மொத்த வருவாய் வரவுகளில் 75.31சதவீதத்தைக் கொண்டிருக்கும்.
2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.2,99,009 கோடியாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள். திருத்த மதிப்பீடுகளில் ரூ.2,93,906 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் ரூ.3,31,569 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும். வரும் நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.14.6 சதவிகிதமாக இருக்கும். நடப்பு ஆண்டில் மத்திய அரசு வரியின் பங்கு ரூ.52,491 கோடியாக இருக்கும்.அதேபோல் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாக குறையும். 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை அடைவோம். என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications