"21 நாட்கள் தான் டைம்.." முதலீடுகளை ஈர்க்க விஜய் அரசு கையில் எடுத்த புதிய திட்டம்! ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் நோக்கில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கு தேவையான பல்வேறு துறை சார்ந்த அனுமதிகளை பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதுடன், மாநிலத்தின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
முந்தைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தொழில்துறை முதலீடுகள் அதிகமாகவே இருந்தது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சீராக உயர இதுவே முக்கிய காரணமாக இருந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் கூட இதை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

ஆளுநர் ஒப்புதல்
இதற்கிடையே புதிதாக அமைந்துள்ள தவெக அரசும் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026ஐ தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருந்தது. தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடு திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்ட திருத்தத்துக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
சட்ட திருத்தத்தின் முக்கிய அம்சமாக "தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்" என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக தமிழக அரசின் தலைமை செயலாளர் செயல்படுவார். தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையை கவனிக்கும் அரசு செயலாளர், ஆணையத்தின் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இதுதவிர அரசு வகுக்கும் நடைமுறைகளின்படி அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் வரை நியமிக்கப்படலாம்.
பெரிய திட்டங்கள்
மாநிலத்துக்கு அதிக அளவில் முதலீட்டையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கக்கூடிய முக்கிய திட்டங்களை இந்த ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும். குறிப்பாக, ரூ.200 கோடி அல்லது அதற்கு மேல் மூலதன முதலீடு செய்யப்படும் திட்டங்கள், குறைந்தபட்சம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள், எப்.டி.ஏ. வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முதலீடுகள், இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தமிழர் வம்சாவளியினரின் முதலீடுகள் ஆகியவை முக்கிய முதலீட்டு திட்டங்களாகக் கருதப்படும்.
முதலீட்டு திட்டம் தொடங்குவதற்கு முன்பான கட்டத்தில் இருந்து, திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து உற்பத்தி அல்லது வணிக நடவடிக்கைகள் தொடங்கும் நிலை வரை அனைத்தையும் இந்த ஆணையம் தொடர்ந்து ஆய்வு செய்யும். பெரிய முதலீட்டு திட்டங்களுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகள், சலுகைகள் மற்றும் பிற ஒப்புதல்கள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையம் உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும். தொழில் திட்டங்களுக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்தும் இன்னும் வணிக நடவடிக்கைகள் தொடங்கப்படாத நிலங்களின் ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு குறித்தும் ஆணையம் ஆய்வு மேற்கொள்ளும்.
பல அதிகாரங்கள்
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இந்த ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும்.
தொழில் திட்டங்களுக்கான அரசு அனுமதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலக்கெடு மாற்றமும் இந்த சட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட அனுமதியை வழங்குவதற்கு 21 நாட்களுக்கு மேல் கால அவகாசம் இருந்தால்.. அந்த காலக்கெடு 21 நாட்களாகக் குறைக்கப்பட்டதாக கருதப்படும். அதேபோல் குறிப்பிட்ட அனுமதிக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் இருந்தாலும், அந்த அனுமதியை வழங்குவதற்கான காலவரம்பு 21 நாட்களாகக் கருதப்படும்.
21 நாட்கள்
இந்த 21 நாள் கணக்கீட்டில் அரசு அறிவிக்கும் பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்கள் சேர்க்கப்படாது. எனவே, எந்தவொரு சிக்கலான அனுமதியாக இருந்தாலும் அதிகபட்சம் 21 நாட்களுக்கு அந்த அனுமதி வழங்கப்படும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்பதே விஜய் அரசின் திட்டம்!


Click it and Unblock the Notifications
