துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்? நேரில் சென்று அழைத்த ஆளுநர் ரவி
சென்னை: துணை வேந்தர்கள் மாநாடு குறித்து இப்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி ஆளுநர் துணை வேந்தர் மாநாட்டை நடத்தவே கூடாது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. இதற்கிடையே துணை வேந்தர் மாநாட்டில் கலந்து கொள்ளத் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய அனைத்து மசோதாக்களும் உச்ச நீதிமனறம் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்திருந்தது. இது மிக முக்கியமான ஒரு தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இனி துணை வேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க முடியும்.

துணை வேந்தர் மாநாடு
இதற்கிடையே உதகையில் வரும் ஏப்ரல் 25, 26ம் தேதிகளில் உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்தச் சூழலில் தான், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்திருந்தது.
ஆளுநர் மாளிகை விளக்கம்
அதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டமளிப்பு விழாக்களை நடத்தவும் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தவும் உரிமை ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
இதற்கிடையே டெல்லி சென்ற ஆளுநர் ஆர் என் ரவி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளத் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார். துணை வேந்தர் மாநாட்டில் பங்கேற்க ஜெகதீப் தன்கரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 25ம் தேதி விமானம் மூலம் கோவை செல்லும் ஜெகதீப் தன்கர், பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்குச் செல்கிறார். அங்கு நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஜெகதீப் தன்கர் கருத்து
ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜெகதீப் தன்கர் கூறிய கருத்துகள் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. அதாவது குடியரசுத் தலைவர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது சரியானது இல்லை எனக் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அவரை மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ஜெகதீப் தன்கருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் ஜெகதீப் தன்கரின் பேச்சு கவனத்தை பெறும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications