தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி! மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? அரசு ஊழியர்கள் வரவேற்பு..!
சென்னை: தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சிபிஎஸ்) நடைமுறையில் இருக்கும் நிலையில் பழைய பென்ஷன் திட்டத்தை ( ஒபிஎஸ் ) மீண்டும் அமல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
2003 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்த ஆண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையிலேயே பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக ஆட்சி மாறி மாறி தமிழகத்தில் அமைந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.
2001 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டுமென அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆராய மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அந்த குழு ஒன்பது மாதங்களில் அறிக்கை தரவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics, பிரத்திக் தாயள், இ.ஆ.ப., துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது." எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், அதே நேரத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளனர் அரசு ஊழியர்கள்.












Click it and Unblock the Notifications