அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..இனி முழு ஊதியத்துடன் 12 வாரம் விடுப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு தொடர்பாக முக்கியமான மாற்றத்தை அறிவித்து மாநில அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதுவரை வழங்கப்படாத 3-வது குழந்தைக்கான பேறுகால விடுப்பும் இனி வழங்கப்படும் என்பதால், அரசு பணியில் உள்ள பெண்களிடையே இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கடந்த மார்ச் 13ஆம் தேதியே இதற்கான அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், தற்போது இந்த தகவல் கசிந்துள்ளது.
இப்போது வரை நடைமுறையில் இருந்த விதிப்படி, பெண் அரசு ஊழியர்கள் முதல் இரண்டு குழந்தைகள் பெறும் காலத்தில் மட்டும் முழு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகபட்சமாக 365 நாட்கள் வரை இந்த விடுப்பு வழங்கப்பட்டது.
ஆனால், மூன்றாவது குழந்தைக்கு எந்தவித பேறுகால விடுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் பல பெண் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தபோது, பெண்களின் நலனையும், சமத்துவ உரிமையையும் கருத்தில் கொண்டு முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், குழந்தைகள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பேறுகால விடுப்பை மறுப்பது சரியான நடைமுறை அல்ல என்று குறிப்பிட்டது. இதற்கான ஆதாரமாக உச்சநீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பையும் சுட்டிக்காட்டியது.அந்த தீர்ப்பில், "பேறுகால விடுப்புக்கு குழந்தைகள் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு விதிக்கக்கூடாது.
பேறுகால விடுப்பு
இருப்பினும், மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் விடுப்பை குறைக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, 26 வாரங்களுக்கு பதிலாக 12 வாரங்கள் விடுப்பு வழங்கலாம் என்றும், பிரசவத்துக்கு முன் குறைந்தது 6 வாரங்கள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, தமிழக அரசு தனது அடிப்படை சேவை விதிகளில் திருத்தம் செய்து, மார்ச் 13ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
12 வாரம் ஊதியத்துடன் விடுப்பு
அதன்படி, இனிமேல் பெண் அரசு ஊழியர்கள் முதல் இரண்டு குழந்தைகளுக்காக வழக்கம்போல் முழு ஊதியத்துடன் தலா ஓராண்டு பேறுகால விடுப்பைப் பெறுவார்கள். அதேசமயம், மூன்றாவது குழந்தை பெற்றாலும் முழு ஊதியத்துடன் 12 வாரங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு
இந்த மாற்றம், அரசு பணியில் உள்ள பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் திட்டமிடல் காரணங்களால் முன்பு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண்கள் தங்கள் உடல்நலத்தையும், குழந்தை பராமரிப்பையும் சிறப்பாக கவனிக்க உதவும் சூழல் உருவாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த புதிய உத்தரவு, பெண்கள் நலனுக்கான அரசின் கவனத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதோடு, வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications