விவசாயிகளுக்கு பெரும் நிம்மதி.. கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வசூலிப்பது முற்றிலும் நிறுத்தம்!
சென்னை: கூட்டுறவு சங்கங்களில் நிலுவை பயிக்கடன் வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
2026-27 ஆம் நிதியாண்டில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் புதிய அறிவுறுத்தல்களை அண்மையில் வெளியிட்டது. அதில், பயிர்க் கடன் நிலுவை தொடர்பான வசூல் நடவடிக்கைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம் 2026-ன் கீழ் பகுதி தள்ளுபடி தொகை பெற்ற விவசாயிகள், எஞ்சிய தொகையை முழுமையாக செலுத்தி கடனை முடிக்காமல் தவணை தவறிய நிலையில் இருந்தால், அவர்களிடம் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பயிர்க் கடன் நிலுவை தொடர்பான அனைத்து வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எனினும் பல்வேறு இடங்களிலும் கடன் நிலுவையை வசூலிக்க தீவிரம் காட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இதுபற்றி தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்பட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தவறாது கடைப்பிடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, அனைத்து விவசாயிகளின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்வது யாதனில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன் வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு சங்கத்திலிருந்து எவரேனும் விவசாயிகளை தொடர்புகொண்டால், தொடர்பு கொண்ட கைபேசி எண் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான (Official Grievance Redressal Number) 98840 00845 (WhatsApp) எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
