தமிழ்நாட்டில் என்ன நோய் பரவுகிறது என்பதே இனி தெரியாதா? 6 மாதங்களாக நிறுத்தப்பட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உள்ள நோய் பாதிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட பருவ கால நோய்கள், பிரசவகால உயிரிழப்புகள் உள்ளிட்ட முக்கியமான சுகாதார தகவல்களை தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் வெளியிடுவது வழக்கம். ஆனால், தற்போது இந்த மாதாந்திர அறிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுகாதார தகவல்களை வெளியிடாமல் இருப்பது பொது க்களின் விழிப்புணர்வையும், நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் பாதிக்கும் கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறையின் கீழ் உள்ள பொது சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் தமிழகத்தின் சுகாதார நிலை குறித்த பல்வேறு தகவல்கள் அறிக்கையாக வெளியிடப்படுவது வழக்கம்.

காய்ச்சல் உள்ளிட்ட பருவகால் நோய்கள் நோய் தொற்றுகளின் பரவல், பிரசவ கால உயரிழப்புகள், தொற்று நோய்களால் ஏற்படும் மரணங்கள் என பல தகவல்கள் இதில் இடம் பெறும். இந்த அறிக்கைகள் மூலமாக தமிழகத்தில் எந்தெந்த நோய்கள் அதிகமாக பரவி வருகின்றன எந்த பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அதற்கு ஏற்ப சுகாதார துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அது மட்டுமல்லாமல் தங்கள் பகுதியில் நிலவும் நோய் தாக்கத்தை குறித்து பொதுமக்களும் தெரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பார்கள். தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் வெளியிட்டு வந்த இந்த மாதாந்திர அறிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை சுகாதாரத் தரவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மே மாதம் முதல் புதிய அறிக்கைகள் வெளியாகவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சுகாதாரத் துறை வல்லுநர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. மாநிலத்தில் தற்போது எந்தெந்த நோய்கள் பரவி வருகின்றன, அவற்றின் தாக்கம் எந்த அளவில் உள்ளது, நோய்ப் பரவல் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படலாம் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாதாந்திர சுகாதார அறிக்கைகள் மட்டுமின்றி, தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மற்றும் ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய மருத்துவ இதழ் வெளியீடும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இதழில் சுகாதாரத் துறையின் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள், நோய்கள் குறித்த ஆய்வு முடிவுகள், நோய்ப் பாதிப்பு மற்றும் பரவல் தொடர்பான விவரங்கள் இடம்பெறும். கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இந்த மருத்துவ இதழும் வெளியிடப்படவில்லை.
இதனால் சுகாதாரத்துறை தொடர்பான ஆய்வுகள் தகவல்களை பெறுவதில் மருத்துவர்கள் ஆய்வாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு வெளியிடும் சுகாதாரத் தரவுகள் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுவதாகவும், அதனால் தான் இந்த அறிக்கைகள் நிறுத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தரவுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதற்காக அவற்றை வெளியிடுவதே நிறுத்துவது சரியான அணுகுமுறை இல்லை என சுகாதாரத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்படாமல் இருந்தால் நோய் பரவல் குறித்த வெளிப்படை தன்மை பாதிக்கப்படலாம் எனவும், சுகாதார திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கும் எதிர்கால திட்டமிடல் நடவடிக்கைகளுக்கும் சிக்கல் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசு மாதம் தோறும் வெளியிட்டு வரும் தகவல்களை உடனே வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.




Click it and Unblock the Notifications
