அடிதூள்! எலக்ட்ரிக் வாகனங்களின் "தலைநகராகும்" தமிழ்நாடு! சென்னையில் நிசான் முதலீடு.. இவ்வளவு கோடியா!
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை: தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்ய நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.

ஓலா
அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஓலா முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும். ஓலாவை தொடர்ந்து இ வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

சென்னை
அந்த வகையில் தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்ய நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் நிசான் நிறுவன ஆலை விரிவுபடுத்தப்பட உள்ளது. முன்பு உள்ள ஆலையில் எஞ்சின் கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வந்தன. தற்போது இங்கே புதிய எலக்ட்ரானிக் கார் உருவாக்க ஆலை அமைக்கப்பட உள்ளது.

ஒப்பந்தம்
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய நிசான் நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 5,300 கோடி மதிப்பில் முதலீடு செய்யப்படுவதால் 2,000 பேருக்கு சென்னையில் வேலைவாய்ப்பு உருவாகும். அதோடு ஆர் அண்ட் டி ஆராய்ச்சிகளும் இங்கே மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்படும் நிசான் எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படும். நிசானின் எலக்ட்ரிக் வாகனங்கள் சென்னையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு
இதனால் தமிழ்நாடு கிட்டத்தட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராக உருவெடுக்க தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. 2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. தற்போது செய்யப்பட்டு உள்ள நிசான் முதலீடு 2023ல் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications