பொன்முடி மகன் கவுதம சிகாமணிக்கு கல்தா? திமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சியை கைப்பற்றும் விசிக!
சென்னை: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியானது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளை எதிர்பார்த்து வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் சலிக்காமல் இதற்காக பேசி வருகிறது விசிக. ஆனால் 2 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்பது திமுகவின் நிலைப்பாடாக உள்ளது. அந்த இரண்டில் விசிக விரும்புவது போல் 1 தனித் தொகுதியும், 1 பொதுத் தொகுதியும் ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டன. சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் வரும் தேர்தலில் சிதம்பரத்தில் மீண்டும் திருமாவளவன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. விழுப்புரம் தொகுதிக்கு பதில் கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியை விசிகவுக்கு திமுக கொடுக்க முன் வந்திருப்பதால் அங்கு விசிக சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விசிக துணைப் பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவளவன் சீட் கொடுத்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இதனிடையே முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகா மணியும் மீண்டும் கள்ளக்குறிச்சியை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகிறார். ஆனால் அவரை துரத்தும் வழக்குகள் திமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் தலா ஓரிரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ளது. இதனால் அதற்கான பேச்சுவார்த்தை பணிகளையும் திருமாவளவன் கவனித்து வருகிறார். வரும் சனிக்கிழமைக்குள் திமுக விசிக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே திமுக -விசிக கூட்டணியில் விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூட்டணியில் பிளவு ஏற்படும் என யாரும் இலவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டாம் எனவும் திருமாவளவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications