நள்ளிரவில் வழிமறித்து மாமூல் கேட்டவர்களை தலைதெறிக்க ஓட விட்ட தமிழக லாரி ஓட்டுநர்.. ஆந்திராவில் செம்ம
சென்னை: ஆந்திராவின் நாயுடுப்பேட்டை பகுதியில் நள்ளிரவில் லாரியை வழிமறித்து மாமூல் கேட்டு மிரட்டிய கும்பலை, நடுரோட்டில் தலைதெறிக்க ஓடவிட்டிருக்கிறார் தமிழக லாரி ஓட்டுநர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பலரும் லாரி டிரைவரை பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் மாமூல் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அஸ்ஸாம், பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஒடிசா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் லாரிகள் சென்று வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து கனரக வாகனங்கள், செல்போன்கள், கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள், காய்கறிகள், அரிசி, முட்டை, பழம் உள்பட பல்வேறு பொருட்கள் தினமும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல் மற்ற மாநிலங்களில் இருந்து பூண்டு, பருப்பு வகைகள், எண்ணெய், ஆப்பிள் உள்பட பல்வேறு பொருட்கள் வருகின்றன. இதுதவிர பல்வேறு தொழிற்சாலைகளுக்கான பொருட்கள் தினமும் தமிழ்நாட்டில் இருந்து செல்கின்றன. அதேபோல் வெளிமாநிலம் சென்று பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்து சென்னை, தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்பியும் வைக்கிறார்கள்.
நேசனல் பெர்மிட் லாரி ஓட்டுநர்கள், தமிழ்நாட்டை தாண்டினால் மாமூல் தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வடமாநிலங்களில் கொள்ளையடிக்கும் கும்பல்கள் ஒருபுறம் எனில், அடாவடியாக மாமூல் வசூலிப்பதும் நடப்பதாக லாரி ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவை தவிர மற்ற மாநிலங்களில் தமிழக லாரி ஓட்டுநர்கள் பல்வேறு சிக்கல்களை அவ்வப்போது சந்தித்து வருவதாக கூறப்படுகிறது,
அதை நிரூபிக்கும் வகையில் ஆந்திராவின் நாயுடுப்பேட்டையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி ஒன்று ஆந்திர மாநிலம் நாயுடுப்பேட்டையில் இரும்பு லோடு ஏற்ற சென்றது. உள்ளூர் மாமூல் கும்பல் லாரியை வழிமறித்து, தங்கள் ஊருக்கு 400 ரூபாய் மாமூல் தர வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழக லாரி ஓட்டுநர் மாமூல் கொடுக்க மறுத்த காரணத்தால், லாரியை செல்லவிடாமல் மறித்து அடாவடி செய்திருக்கிறார்கள். இதனால் கோபம் அடைந்த தமிழக லாரி ஓட்டுநர், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை உங்களுக்கு எதற்கு நாங்கள் கொடுக்க வேண்டும். உழைத்து சம்பாதியுங்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் லாரி ஓட்டுநரை அடிக்க பாய்ந்தது.
இந்நிலையில மாமூல் கொடுக்காமல் லாரியில் தமிழக ஓட்டுநர் ஏறிய போது, அவர்கள் லாரியை செல்லவிடாமல் தடைகளை ஏற்படுத்தி உள்ளார்கள். ஆனால் அந்த தடைகளை தகர்த்த லாரி ஓட்டுநர், வாகனத்தை எடுத்து ஓட்டியபடி மாமூல் கேட்டவர்களை நடுரோட்டில் ஓடவிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications