ஏதோ மர்மம் இருக்குது.. ஆளுநர் எடுத்த முடிவு! எதிர்க்காமல் சைலண்ட் ஆன ஸ்டாலின், பொன்முடி.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், புதிய துணைவேந்தராக டாக்டர் பெலிக்ஸ் என்பவரை நியமித்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த நியமனம் குறித்து கல்வியாளர்கள் மத்தியில் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.

தமிழக சட்ட சபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது.. இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
வழக்கு நிலுவை: கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.
தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார், என்று வழக்கில் தமிழ்நாடு அரசு கூறியது.
செக் வைக்க திட்டம்: இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கலாம். முக்கியமாக மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கையில் அவர் இன்னும் கையெழுத்து போடவில்லை. இதில் கையெழுத்து போட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பப்பட்டது.
இது தொடர்பான கோரிக்கையும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுவாக வைக்கப்பட்டு உள்ளது. அதாவது அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளை பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கோடநாடு வழக்கிலும் கூட எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருப்பி அனுப்பிய ஆளுநர்: இதனையடுத்து அவசரம் அவசரமாக, தம்மிடம் நிலுவையில் இருந்த பல்கலைக் கழகம் தொடர்பான 10 மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பினார் கவர்னர். அப்படி திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில் பேரவையின் சிறப்புக்கூட்டத்தை கடந்த 18-ந்தேதி கூட்டி மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.
இந்த நிலையில், மீன்வள பல்கலைகழக துணைவேந்தரை கவர்னர் நியமித்து ஆணை பிறப்பித்திருப்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர்கள், ''பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் இருப்பதை மாற்றி வேந்தராக இனி முதல்வரே இருப்பார் என்கிற சட்டத்திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்து ள்ளது அரசு. அப்படிப்பார்த்தால், மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்குத்தான் உண்டு.
முதல்வருக்கே அதிகாரம்: ஆனால், கவர்னர் நியமிக்கிறார். அப்படியானால், இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் தரவில்லையா? என்கிற கேள்வி வருகிறது. அப்படி கவர்னர் ஒப்புதல் தராமல் வழக்கம்போல நிலுவையில் வைத்திருந்தால், கவர்னரால் நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட மீன்வள பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தை முதல்வர் ஸ்டாலின் எதிர்த்திருக்க வேண்டும்.
ஆனால், முதல்வரும் எதிர்க்கவில்லை ; உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியும் எதிர்க்கவில்லை. வேந்தராக முதல்வர் தான் இனி இருப்பார் என சட்ட மசோதா நிறைவேற்றியிருக்கும் நிலையில், கவர்னரால் செய்யப்பட்ட நியமனத்தை எதிர்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம் ? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது '' என்று கல்வியாளர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications