Kidney Scam: சிறுநீரக மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் யார்? அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு தகவல்
சென்னை: சிறுநீரக மோசடியில் தொடர்புடைய மருத்துவர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தார்.
யாராவது விபத்து, நாள்பட்ட நோய்கள் உள்ளிட்டவைகளால் மூளைச்சாவு அடைந்துவிட்டால், அவர்களை மேற்கொண்டு காப்பாற்ற முடியாது என்ற பட்சத்தில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

அவை ஏற்கெனவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்தவர்களின் வரிசைப்படி வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்த மாநில உறுப்பு மாற்று ஆணையம் உள்ளது.
அதே நேரம் உயிருடன் இருப்பவர்கள் தங்களது ரத்த சொந்தங்களுக்கு கல்லீரல், கிட்னியை தானமாக அளிக்கலாம். அதற்கு சில கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதை பயன்படுத்திக் கொள்ளும் தரகர்களும் தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்களும் ஏழைபட்டவர்களுக்கு பணத்தாசை காட்டி பொய் வாக்குறுதிகளையும் கொடுத்தும் அவர்கள் அந்த நோயாளியின் உறவினர் என பொய் சொல்ல வைத்து உறுப்புகளை பெறுகிறார்கள்.
இப்படி சிறுநீரக மோசடி தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நடந்துள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக டாக்டர் வினித் ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அதன்பேரில் திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாக விசாரணையில் உறுதியானது. அந்த மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஏழை விவசாயிகளும் குறிவைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அவர்களை தமிழக மருத்துவர்களும் சில இடைத்தரகர்களும் தொடர்பு கொண்டு சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தை விசாரிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த இரு விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தையே பெரிதும் உலுக்கிய சிறுநீரக மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவர்கள் யார் யார் என்பதை விசாரணைக் குழுவினர் விசாரித்து வருகிறார்கள். விரைவில் பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவித்தார். எனவே அந்த மோசடி மருத்துவர்கள் யார் யார், அவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்து விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
