திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!
சென்னை: திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் இருந்து தொடங்கப்படவிருந்த நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டிற்கு எதிரான இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்திற்குத் தமிழ்நாடு காவல்துறை தடை விதித்ததுடன், பெரியார் திடலில் போலீஸ் படையைக் குவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, சமூகநீதிப் பிரச்சனையில் கை வைப்பது, சமூக விரோதச் செயல் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில், ஜூலை 30, 31, ஆகஸ்ட் 1, 2 ஆகிய 4 நாட்கள், தமிழ்நாட்டின் 6 முனைகளிலிருந்து இரு சக்கர வாகனப் பரப்புரை நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். இந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், சென்னை வேப்பேரியில் உள்ள தி.க தலைமை அலுவலகமான பெரியார் திடலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த இருசக்கர வாகன பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக திராவிடர் கழகம் அறிவித்தது. இந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்த தவெக அரசுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இது தொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், 'நீட்' தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (30.7.2026) முதல் 2.8.2026 வரை இரு சக்கர வாகனத்தின் மூலம் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு முறைப்படி காவல்துறைத் தலைமை இயக்குநர் அவர்களிடம் (டிஜிபி), திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த 18.7.2026 அன்று அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
எந்தெந்தப் பகுதிகளில் இரு சக்கரப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என்ற பட்டியலும், அந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டும் இருந்தது.
தாங்கள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் வழிகளில் உள்ள காவல் அலுவலகங்களில் சென்று அனுமதியையும், பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறை தலைமை இயக்குநரிடமிருந்து 27.7.2026 நாளிட்ட கடிதம் (ந.க.எண்/4909650 பொது 2(2) 2026 நாள்: 27.7.2026) திராவிடர் கழகத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, திராவிடர் கழகம் பரப்புரைப் பயணம் செல்லும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஆங்காங்கு திராவிடர் கழத்தின் சார்பில், விண்ணப்பிக்கப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரு சக்கர வாகனப் பயணம் இன்று (30.7.2026) காலை புறப்பட இருந்த இந்தத் தருணத்தில், திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பயணத்திற்கு காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அரசியல் சாராத சமூகநீதியையும், சமூக சீர்திருத்தத்தையும் நோக்கமாகக் கொண்ட பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவ இயக்கமாகும். மக்களிடம் கருத்துகளைப் பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது திராவிடர் கழகத்தின் அணுகுமுறையாகும்.
தந்தை பெரியார் காலத்திலிருந்து, அவர்களின் வழிகாட்டு முறையில், இதுதான் நடைமுறையாகும்.
இப்பொழுது நடத்த திட்டமிட்டிருந்த 'நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் என்பதும், முதன்முறையல்ல. என்றைக்கு 'நீட்' அறிவிக்கப்பட்டதோ, அப்பொழுது முதலே (2010 ஆம் ஆண்டுமுதல்) 'நீட்' எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
2017 இல் மார்ச் 18 முதல் 21 வரை அய்ந்து முனைகளில் இருந்து, அய்ந்து நாள்கள் 'நீட்' எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் நடைபெற்றது.
2020 ஆம் ஆண்டு 'நீட்' எதிர்த்து தொடர்ந்து பத்து நாள்கள் 2,700 கிலோ மீட்டர் தூரம் அளவுக்குக்கூட பரப்புரைப் பயணத்தை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. நாமே (கி.வீரமணி) பங்கேற்று பரப்புரை நிகழ்த்தியுள்ளோம்.
மீண்டும் எமது தலைமையில் நாகர்கோயில் முதல் சென்னை வரை கூட இத்தகைய பரப்புரைப் பயணத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு (3.4.2022 முதல் 25.4.2022 வரை). 2024 இல் (ஜூலை 11 முதல் 15 வரை) மீண்டும் அய்ந்து முனைகளிலிருந்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தைக் மாணவர் கழகத்தினர், கழக இளைஞரணியினர் நடத்தியுள்ளார்கள்.
எந்த ஆட்சிக் காலத்திலும் இத்தகைய சமூகநீதிப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதில்லை.
எந்தப் பிரச்சாரமும் சட்டத்திற்கு மாறாக திராவிடர் கழகம் நடந்ததில்லை.
போதிய அவகாசம் கொடுத்து, காவல்துறை அலுவலகங்களுக்கு அனுமதி கோரியிருந்தும், பிரச்சாரப் பயணம் புறப்படும் நாளில், அனுமதி மறுப்பது எந்த வகையிலும் உகந்த நடைமுறையல்ல. இது கருத்துரிமைக்கும், பிரச்சார உரிமைக்கும் எதிரானதாகும்.
திராவிடர் கழகம் நடத்தும் பிரச்சாரமானாலும், போராட்டமானாலும், அதில் கிஞ்சிற்றும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைக்கு இடம் இல்லை. சட்டத்திற்குட்பட்டு, அறவழியில் செயல்பட்டு வந்திருக்கிறது என்பது கடந்த கால வரலாறு - இனியும் அதே நிலைதான் தொடரும்.
தடையை மீறி இந்தப் பிரச்சாரப் பயணத்தை நடத்த முடியும் என்றாலும், முதலில் சட்ட ரீதியாக இப்பிரச்சினையை கழகம் அணுகும். அரசியலமைப்புச் சட்டப்படியான நமது அடிப்படை கருத்து, பேச்சு, ஜனநாயக உரிமைக்கு நீதிமன்றத்தின்மூலமாகப் பரிகாரம் தேடப்படும். தற்போதைக்கு திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது.
நீதி கிடைக்காத ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில், தடையை மீறி, கழகத்தின் பிரச்சாரப் பயணம் நடைபெறும் என்பது உறுதி! உறுதி!! தோழர்கள் அமைதி காக்க வேண்டுகிறோம்! ''என்னுடைய போராட்டத்தின் வெற்றி தாமதமாகலாமே தவிர, ஒருபோதும் தோல்வி அடையாது'' என்ற தந்தை பெரியாரின் கருத்தை நினைவு கொள்வோம்!
தந்தை பெரியாரை தமது ஆட்சியின் கொள்கை அடையாளமாக அறிவித்த த.வெ.க. ஆட்சி, 'நீட்' வேண்டாம் என்பது எங்கள் நிலைப்பாடு' என்று அறிவித்த ஓர் ஆட்சி, அதற்கு மாறாக நடந்துகொள்வது மக்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்!
அதுவும், சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் நிறுத்தட்டும்! அறவழியில் நடக்கவிருந்த நீட் தேர்வு எதிர்ப்பு விளக்கப் பிரச்சாரத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
