கிறிஸ்துமஸ்.. இயேசு பிறந்தநாள்.. தேவ மைந்தனிடம் உலக அமைதிக்காக பிரார்த்தனை.. தலைவர்கள் வாழ்த்து
சென்னை: அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டும் தமிழக அரசின் சார்பில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைதி திரும்ப வேண்டும் என்று மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிச் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: 'கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. நீ செய்ய நினைக்கும் செயலை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்'என்பதுபோல, தனிமனிதர் உள்ளத்தை பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர்.
கிறிஸ்தவ மதத்தை பரப்பிட தமிழகம் வந்த சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை. இதில் பலருக்கு சிலைகள் நிறுவி உள்ளது திமுக அரசு. கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்தது முதல் உபதேசியார் நல வாரியம் தொடங்கியது, ஜெருசலேம் புனித பயணம் செல்ல அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு மானியம் உயர்வு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டும் இந்த அரசின் சார்பில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்' என்ற இயேசுவின் போதனையை மனதில் வைத்து, கவலைகள் மறந்து,இன்பம் நிறைந்து, நண்பர்கள், உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும்கிறிஸ்தவ மக்களுக்கு நல்வாழ்த்து கள்.
ஓ.பன்னீர் செல்வம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், செல்வங்களில் மேலானது அன்புதான் என்பதை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டிய இயேசுவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் திரு நாளை கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரது துன்பங்கள் நீங்கட்டும், இன்பங்கள் பொங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
வைகோ: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் உலகெங்கிலும் போராட்டமும், துன்பமும் நிறைந்த மனித வாழ்வில், இதய காயங்களுக்கு மருந்தாக உபதேசங்களை தந்த இயேசுவின் பிறந்தநாளில் அன்பை யும், கனிவையும் பரிமாறும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகள்.
டிடிவி தினகரன்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்து செய்தியில், எண்ணிலடங்கா துன்பங்கள், துயரங்களை சந்தித்த போதிலும் அன்புதான் உலகின் மிகப் பெரிய சக்தி என்பதை நிரூபித்தவர் இயேசு. அவர் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நண்பர்களிடம் மட்டுமின்றி, எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும் என்று போதித்தவர் இயேசுபிரான். சக மனிதர்களை மதிக்க கற்றுக் கொடுத்தவர். அவரது பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல பாமக தலைவர் அன்புமணி, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
அரசியல் தலைவர்கள்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அர்ப்பணிப்பு, மனிதாபிமான உணர்வு, சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை, சு.திருநாவுக்கரசர் எம்.பி., சமக தலைவர் சரத்குமார், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications