யாருக்கு அடிக்க போகுது லக்.. அரசு ஊழியர்கள் ஓட்டுகள் யாருக்கு? திருச்சியில் திரண்ட தேர்தல் ஆபீசர்ஸ்!
சென்னை: 2026 தமிழக தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது தபால் வாக்குகள் தான். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் முதியவர்கள் மற்றும் பணி உள்ளிட்ட சூழல்களால் நேரடியாக சென்று வாக்கு செலுத்த முடியாதவர்கள் தபால் வாக்கு செலுத்தி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 8 லட்சம் தபால் வாக்குகள் பதிவானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பதிவான தபால் வாக்குகள் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு 234 தொகுதிகளுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையமும் தொடங்கிவிட்டது.

இந்த முறை தமிழகம் முழுவதும் 85 சதவீதம் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக கூறப்படுவதால், தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அரசு ஊழியர்கள் ஓட்டு
இந்த தேர்தலில் மொத்தம் சுமார் 5 கோடி 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருந்த நிலையில், அதில் 4 கோடி 82 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பது தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிகளவு வாக்குப்பதிவு நடைபெற்றதால், யாருக்கு இது சாதகமாக அமையும் என்ற கணிப்புகள் பல்வேறு தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தபால் வாக்குகள்
இந்த தேர்தலில் தபால் வாக்குகள் மிக முக்கிய பங்காற்றும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் நேரடியாக வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத சூழலில் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். மொத்தமாக சுமார் 8 லட்சம் அளவுக்கு தபால் வாக்குகள் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
தபால் வாக்கு பிரிப்பு
இந்த தபால் வாக்குகள் ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை சரியான முறையில் தொகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை எளிதாக மேற்கொள்ளும் வகையில், மாநிலம் முழுவதும் சேகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை ஒரே இடத்தில் பிரித்து வழங்குவதற்காக திருச்சி மாவட்டம் சிறப்பு மையமாக தேர்வு செய்யப்பட்டது.
முன் ஏற்பாடுகள்
அங்கு மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கம் மண்டபத்தில் தபால் வாக்குகளை பிரிக்கும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முதற்கட்டமாக ஏப்ரல் 20ஆம் தேதி தபால் வாக்குகளை பிரித்து மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 28ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கான தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்.
தேர்தல் பொறுப்பு அலுவலர்கள்
இந்த நிகழ்வின் போது, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டு, அவர்களுக்குரிய மாவட்டங்களுக்கான தபால் வாக்குகளை பெற்று சென்றனர். மேலும், இந்த செயல்முறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களும் கலந்து கொண்டு பணிகளை கண்காணித்தனர். இதன் மூலம் தபால் வாக்குகள் தொடர்பான செயல்முறைகள் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை
திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்ட தபால் வாக்குகள் தற்போது அந்தந்த மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. பின்னர் அந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அவை ஒப்படைக்கப்பட உள்ளன. இதன் மூலம் வாக்கு எண்ணிக்கை நாளில் எந்த தாமதமும் இல்லாமல் தபால் வாக்குகளை முதலில் எண்ணும் பணிகள் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான அதிகளவு தபால் வாக்குகள் காரணமாக, ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications