"ஆணவக் கொலை சட்டம்.. வன்னி அரசு முயற்சிக்கு தவெக அரசுக்குள்ளேயே ஒத்துழைப்பு இல்லை” - எவிடென்ஸ் கதிர்
சென்னை: "ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டத்தை கொண்டு வர ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், அந்த முயற்சிக்கு தமிழக வெற்றிக் கழக அரசுக்குள் முழுமையான உடன்பாடு இல்லை என தகவல் கிடைத்துள்ளது" என சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை காதல் ஜோடி உயிரிழப்பு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பார்த்திபன் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவே இரு வீட்டாருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னை சாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதாக கூறிய பார்த்திபன் காதலியின் குடும்பத்தினர் மீது பொறையார் காவல் நிலையம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், சிறுமியின் வீட்டுக்கு அருகில் ஒரு இடத்தில் உள்ள கீற்று கொட்டகையில் காதலர்கள் இருவரும் சடலமாக கிடந்தனர். காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது ஆணவப் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டியது அவசியம் என சமூக செயற்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார். மேலும், மயிலாடுதுறை சம்பவத்தில் விசாரணை முறையாக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எவிடென்ஸ் கதிர் அளித்துள்ள பேட்டியில், "அமைச்சர் வன்னி அரசு உண்மையிலேயே ஆணவப் படுகொலை தடுப்புக்கான தனிச்சட்டம் வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். மற்ற அமைச்சர்களைவிட மிகவும் வெளிப்படையாக இதைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். ஆண்டாண்டு காலமாக ஆணவக் கொலைகளுக்கு எதிராக பல்வேறு மேடைகளில் குரல் கொடுத்தவர் அவர். தனிப்பட்ட முறையிலும் இந்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
எந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் வந்தாலும் இந்த விவகாரத்தில் குரல் கொடுப்பேன் என்று அமைச்சர் வன்னியரசு ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால், அதற்கான அரசியல் சூழல் அவருக்கு கிடைத்ததா என்பது தெரியவில்லை. அவருக்குத் தேவையான இடமும், ஆதரவும் இருந்ததா என்பதும் தெரியவில்லை. எனக்கு கிடைத்த தகவலின்படி, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு தமிழக வெற்றிக் கழக அரசுக்குள்ளேயே உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அமைச்சர் வன்னியரசு பேசுவது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல. அது ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல். சாதியின் பெயரில் உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம். எனவே, தமிழக அரசு எந்த தயக்கமும் இன்றி ஆணவப் படுகொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். அதுவே சரியான தீர்வாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை காதல் ஜோடி உயிரிழப்பு தொடர்பாக பேசிய எவிடென்ஸ் கதிர், "இந்த வழக்கில் கொலைக்கான ஆதாரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், தற்கொலைக்கு தூண்டுதல் என்ற கோணத்தில் வழக்கை வலுப்படுத்த வேண்டியிருந்தது. தாக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த சாதி அழுத்தம், சமூக அழுத்தம் ஆகியவை விசாரணையின் மையமாக இருக்க வேண்டும். ஆனால், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்த வழக்கை வெறும் தற்கொலையாக மட்டுமே அணுகியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications