4 கிலோவாட் மின் இணைப்புக்கு நாளை முதல் கள ஆய்வு இல்லை.. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய நடைமுறை
சென்னை: தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு புதியதாக 4 கிலோ வாட் மின்சாரம் இணைப்புக் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் அதாவது நாளை முதல் நேரடி கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்..

கள ஆய்வு இல்லாமல் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு
அதில், "மின் பகிர்மான கழகத்தில், புதிய மின் இணைப்பு கோரும் ஒருமுனை வீட்டு மின் இணைப்பு (நீட்டிப்பு அல்லது மேம்பாட்டு பணி எதுவும் தேவைப்படாத இணைப்புகள் மட்டும்) விண்ணப்பதாரர்களுக்கு, கள ஆய்வு இல்லாமலேயே சுய உறுதிமொழி (Self-Declaration) அடிப்படையில் புதிய மின் இணைப்பு வழங்கப்படும். இதன்மூலம் புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பத்தாரர்களுக்கு செயல்முறை எளிதாக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்,
அமைச்சரின் அறிவிப்பையடுத்து, மின் பகிா்மானக் கழகத்தில் 4 கிலோ வாட் வரை உள்ள புதிய வீட்டு மின் இணைப்புகளுக்கு விரிவாக்கம் அல்லது மேம்பாட்டுப் பணிகள் தேவையில்லாத நிலையில், இனி கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.. இந்த நடைமுறையானது நாளை முதல் அமலுக்கு வரப்போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4 கிலோவாட் வரை மின்சார இணைப்புகள்
இதுகுறித்து, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதன்படி, "ஆன்லைனில் புதிய மின்சார இணைப்புகள் பெறும் அனைவருக்குமே இனி நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்படாது. 4 கிலோவாட் வரை மின்சார இணைப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேவையான ஆவணம் மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் GPS இருப்பிடக் குறியீடுகளைச் சரியாக ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும்.
நாளை முதல் அமல்
இந்த இரண்டும் சரியாக இருந்தால், மின்பகிர்மானக் கழகம், GPS தகவல்களை GIS செயலி மூலம் சரிபார்த்து, நேரில் எந்தக் கள ஆய்வுமே இல்லாமல் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுவிடும். ஆனால், முக்கியமாக ஆன்லைனில் பதிவேற்றப்படும் ஆவணங்கள் நகல் ஆவணங்களாக இருக்கக்கூடாது.
ஒருவேளை, ஆவணங்கள் சரிபார்ப்பிலோ, GPS சரிபார்ப்பிலோ ஏதேனும் குழப்பம் இருந்தால், நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். கள ஆய்விற்குப் பிறகு, மீட்டர் பொருத்தும் போது, அப்போது அங்கே GPS பதிவு செய்யப்படும். ஆவணம், GPS சரிபார்ப்பின் போது, விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து மெசேஜ், மெயில் மூலம் தெரிவிக்கப்படும். இந்த நடைமுறை வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதகமான அம்சங்கள்
உண்மையிலேயே மின்துறையின் இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு பயனுள்ள மற்றும் வரவேற்கத்தக்க விஷயம் என்றே சொல்லலாம்.. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், கள ஆய்வுக்காக மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இணையம் மூலமாகவே எளிமையாகவும் விரைவாகவும் புதிய மின் இணைப்பை பெற முடியும்.. இதனால் விண்ணப்பதாரர்களுக்கு அலைச்சலும் நேரமும் தவிர்க்கப்படும்,
முக்கியமாக புரோக்கர்களின் தலையீடு இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் அரசு சேவைகள் மக்களைச் சென்றடைய இந்த நவீன தொழில்நுட்ப முறை பெரிதும் உதவும் என்றே நம்பப்படுகிறது..!!


Click it and Unblock the Notifications
