குட்நியூஸ் சொன்ன பதிவுத்துறை.. அதும் வரும் திங்கட்கிழமையேவா.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: சுபமுகூர்த்த தினத்தில் பத்திரப்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதை அறிந்த கொண்ட தமிழக பதிவுத்துறை, அவர்களுக்கு நல்ல செய்தியை கூறியுள்ளது. ஆவணி மாதத்தில் வரும் நல்ல சுப முகூர்த்த நாளான வருகிற 21-ந் தேதி பத்திர பதிவுக்காக கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
பொதுவாக வீடு, நிலம், மனை, காலியிடம் போன்றவை வாங்குவோர் நல்ல நாள், நல்ல நேரம் ஆகியவற்றை பார்த்து தான் வாங்குவார்கள்.குறிப்பாக பத்திரம் பதியும்நாள் மிக சுபமுகூர்த்த தினமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.ஆனால் பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு எளிதாக இருக்காது. அதிகப்படியான மக்கள் கூட்டம் அலைமோதும்.

இதனால் பலரும் பத்திரம் பதிய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் சுபமுகூர்த்த நாளில் பத்திரம் பதிய சிறப்பு வசதிகளை பதிவுத்துறை அறிவித்து வருகிறது. அண்மையில் ஆடி 18 அன்று, அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி பத்திரங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது. அரசுக்கும் ஏராளமான வரி வருவாய் கிடைத்தது. அந்த வகையில் தான் முகூர்த்த நாளான வருகிற 21-ந் தேதி பத்திர பதிவுக்காக கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 14 ஆயிரத்து 449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான வருகிற 21-ந் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதை ஏற்று 21-ந் தேதி ஒரு சார்பதிவாளர் பணியில் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் பணியில் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.
இதுதவிர ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்."இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications