நாமிருவர் நமக்கு ஒருவர்.. சர்ரென சரியும் குழந்தை பிறப்பு விகிதம்! தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு ஆபத்தா?
சென்னை: தமிழகத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதால், மக்கள் தொகை பெருக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்து இருக்கிறது. குறிப்பாகக கடந்த ஆண்டு மட்டும் 6.9% ஆக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. விரைவில் இந்தியாவின் மக்கள் தொகை 200 கோடியை கூட எட்டலாம் என கணிக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்தின.
நாம் இருவர் நமக்கு இருவர், நாம் இருவர் நமக்கு ஒருவர் என விழிப்புணர்வு வாசகங்களும் பொதுவெளியில் அதிகமாக காணப்பட்டது. இதை அடுத்து பெரும்பாலானோர் முறையாக குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கடைபிடித்ததால் தமிழகத்தின் அபரிமிதமாக இருந்த மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் வந்தது.

70, 80 கால கட்டங்களில் ஒரு குடும்பத்தில் ஏழு முதல் எட்டு குழந்தைகள் கூட இருப்பார்கள். 90 கால கட்டங்களில் மூன்று இரண்டு என இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது ஒன்று இரண்டு என சரிந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் தொகை வெகுவாக சரிந்து வருகிறது. பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெற்றோர்கள் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதால் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்திருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒன்பது லட்சத்து 24 ஆயிரத்து 256 குழந்தைகள் பிறந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு 9 லட்சத்து 12 ஆயிரத்து 869 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. 20212 ஆம் ஆண்டில் ஒன்பது லட்சத்து 36 ஆயிரத்து 361 குழந்தைகளுக்கு, 2023ல் 9 லட்சத்து 2,329 குழந்தைகளும் பிறந்திருக்கின்றன. 2024 இல் 8,47,668 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கிறது. 2020 முதல் 2023 வரை 9 லட்சத்துக்கும் மேல் இருந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை 2024' 8 லட்சமாக சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பாதியாக இருக்கிறது. இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் 7.5 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை மட்டுமே குழந்தை பிறப்பு விகிதம் இருக்கும் என கூறப்படுகிறது. 2023ல் இருந்ததை காட்டிலும் 2024ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் 6.9% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்கள் தொகை தொடர்ந்து ஒரே அளவில் நீடிக்க வேண்டுமென்றால் பிறப்பு விகிதம் தேசிய அளவில் 2.10 சதவீதமாக தொடர வேண்டும். ஆனால் தற்போது இந்திய அளவில் 1.90 சதவீதமாகவும், தமிழகத்தில் 1.40 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. குழந்தை பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படுவது தற்போதைக்கு ஆரோக்கியமான சூழலாக இருந்தாலும் வரும் காலங்களில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக முதியவர்கள் இன்னும் 20 ஆண்டுகளில் அதிகமாக இருப்பார்கள். அதே நேரத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். அதிதீவிரமாக குழந்தை கட்டுப்பாட்டை கடைபிடித்ததால் தான் சீனாவிலும் ஜப்பானிலும் தற்போது அதிக அளவில் முதியவர்கள் இருக்கிறார்கள். அங்கே இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போதைக்கு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறையும். இது சமூக, பொருளாதார அடிப்படையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications