பள்ளிக் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் பல்ப்? சீறிய எதிர்க் கட்சிகள்! அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன விளக்கம்
சென்னை: தமிழக அரசின் 2026 2027 ஆம் ஆண்டுக்கான முதல் முழுமையான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித் துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு பட்ஜெட்டை விட சுமார் 2,740 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் ககக பட்ஜெட்டே பள்ளி கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன் கூறியுள்ளார்,
2026 - 2027 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதைவிட சுமார் 2240 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழக பட்ஜெட் 2026
குறிப்பாக கடந்த தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை விட 4,007 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது என விமர்சிக்கப்படும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் மிகை மதிப்பீடு செய்யப்பட்ட ஊதிய செலவுகள், கணக்கீடுகள் திருத்தப்பட்டு உண்மையான மற்றும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் எந்த ஒரு திட்டமும் நீக்கப்படவில்லை எனவும் நிதி குறைக்கப்படாமல் புதிய திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
ராஜ்மோகன்
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதை விட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது.
திமுக
காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே. தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்." என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
