சந்திரகிரகணம் 2025: கர்ப்பிணிகள் கிரகணத்தை பார்க்கலாமா? விஞ்ஞானம் சொல்வது என்ன?
சென்னை: சந்திரகிரகணம் பற்றி மூடநம்பிக்கை கூடாது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சந்திரகிரகணம் 82 நிமிடங்களுக்கு நீடிக்கிறது. அனைவரும் வெளியே வந்து நிலாவை பார்க்கலாம் என்றும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், செப்டம்பர் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சுமார் 82 நிமிடங்கள் நிகழ கூடிய வானியல் நிகழ்வாக இந்த சந்திரகிரகணம் உள்ளது.

இந்த அபூர்வ நிகழ்வை நாம் அனைவரும் ரசிக்க வேண்டும். இதைச் சுற்றி நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளன. நிழல்களின் விளையாட்டான கிரகணங்களை மூடநம்பிக்கையாக கொண்டு போகக் கூடாது. அனைவரும் வெளியே வந்து நிலவை பார்க்கலாம்.
இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மிக பிரம்மாண்டமான வாயு கோளான சூரியனை பூமியும் சந்திரனும் சுற்றி வரும் போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரு முறை நேர்கோட்டில் சந்திக்கிற நிகழ்வாக இந்த சந்திரகிரகணம் உள்ளது. இவற்றை வெறும் கண்களால் அழகாக பார்க்கலாம். அறிவியல்தான் நம்மை வளர்த்துள்ளது. மூடநம்பிக்கை இல்லை.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிரகண விருந்து நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பொது நிகழ்வுகள் கிரகண விருந்து, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். சந்திரகிரகணம் குறித்து பரப்பப்படும் மூட நம்பிக்கைகளை மக்கள் நம்ப வேண்டாம். சந்திர கிரகணம் மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
எனவே சந்திரகிரகணத்தை அனைவரும் வெறும் கண்களால் அழகாக பார்க்கலாம். அங்கேயே அமர்ந்து நீங்கள் சமைத்துக் கூட சாப்பிடலாம். யாருக்கும் எதுவும் ஆகாது. மற்றொரு வழக்கமான நாள் போன்றுதான் அந்த நாளும்!
கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது. சாப்பிடக் கூடாது, கோயில்களில் நடைகளை அடைத்து வைக்க வேண்டும் என மூடநம்பிக்கைகள் உள்ளன. இது எதுவுமே உண்மை கிடையாது. இந்த சந்திரகிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி 12.23 மணிக்கு முடிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சந்திர கிரகணம் என்றால் என்ன?
சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்பது ஒரு வானியல் நிகழ்வு. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. அப்போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வருவதால், பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதனால் சந்திரன் மங்கலாகவோ அல்லது முற்றிலும் மறைக்கப்பட்டோ காணப்படும். இது பௌர்ணமி நாளில் மட்டுமே நிகழும்.
சந்திர கிரகணத்தின் வகைகள்
சந்திர கிரகணம் அதன் தன்மைக்கு ஏற்ப மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:
- முழு சந்திர கிரகணம் (Total Lunar Eclipse):
- பூமியின் முழு நிழலும் (umbra) சந்திரன் மீது விழும்போது இந்த வகை கிரகணம் ஏற்படுகிறது.
- இந்த நேரத்தில், சந்திரன் முற்றிலும் இருண்டு, சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும். இது "இரத்த நிலவு" (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், சூரிய ஒளியில் உள்ள நீல நிறக் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, சிவப்பு நிறக் கதிர்கள் மட்டுமே சந்திரனை அடைகின்றன.
- பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar Eclipse):
- சந்திரனின் ஒரு பகுதி மட்டும் பூமியின் முழு நிழலுக்குள் (umbra) செல்லும் போது இது நிகழ்கிறது.
- இந்த நேரத்தில், சந்திரன் ஒரு பாதி இருண்டும் மற்றொரு பாதி ஒளிர்ந்தும் காணப்படும்.
- புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse):
- சந்திரன் பூமியின் புறநிழலுக்குள் (penumbra) மட்டும் கடந்து செல்லும் போது இது ஏற்படுகிறது.
- இந்த வகை கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது கடினம். ஏனெனில், சந்திரன் லேசாக மங்கலாக மட்டுமே காணப்படும்.
அறிவியல் மற்றும் ஜோதிட நம்பிக்கைகள்
அறிவியல் பார்வை: சந்திர கிரகணம் ஒரு இயல்பான வானியல் நிகழ்வு. சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஜோதிட மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள்
கிரகண நேரத்தில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பது, கோயில்களின் நடைகளை மூடுவது போன்ற சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் மற்றும் ராசிக்காரர்கள் கிரகணத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க சில பரிகாரங்களைச் செய்வது வழக்கம்.
கர்ப்பிணிப் பெண்கள் இந்த நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications