விளாத்திகுளம் ‘விஸ்வரூபம்’.. தமிழ்நாட்டில் தொடரும் குற்றச்சம்பவங்கள்.. நடவடிக்கை பாயுமா?
சென்னை: "எங்க புள்ளைய நாங்களேதான் தேடி எடுத்தோம்... போலீஸ் அப்போ நடவடிக்கை எடுக்காமல், இப்போ நடவடிக்கை எடுப்போம்னு சொல்றாங்க" - இது தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் கொல்லப்பட்ட அந்த 17 வயது மாணவியின் உறவினர் ஒருவரின் கதறல் அல்ல, இந்த ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டின் மீது வீசப்படும் சாட்டையடி!
அலட்சியத்தின் உச்சம்: விளாத்திகுளம் துயரம்
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலை, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பிளஸ் டூ மாணவி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அடுத்த நாள்.. மார்ச் 11 ஆம் தேதி அந்த கிராமம் அருகே முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் அந்த மாணவி இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த மாணவியின் ஆடைகள் களையப்பட்டிருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மாணவியை கொன்றவர்களை கைது செய்யப்படாததால் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

தொடக்கத்தில் அந்த மாணவியின் உடலை கூட போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் ஊரே திரண்டு தேடியபோதுதான், வீட்டின் அருகிலேயே புதர்மறைவில் அந்தப் பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீஸ் சொன்ன அந்த 'தாமதம்'தான் ஒரு உயிரைப் பறித்திருக்கிறது. வழக்கம் போல விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு, ஒரு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், ஒரு எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட் என செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்திருக்கிறது டி.ஜி.பி அலுவலகம்.
குற்றவாளி தர்ம முனீஸ்வரன் ஏற்கெனவே ஒரு பாலியல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த டிசம்பரில்தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறான். இப்படிப்பட்ட கிரிமினல்கள் ஊருக்குள் சுதந்திரமாக உலவுவதை உளவுத்துறை கவனிக்கத் தவறியது ஏன்?
இரண்டு வார கால 'இரத்தச் சரித்திரம்'
தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் நடந்திருக்கும் சம்பவங்களைப் பட்டியலிட்டால் நெஞ்சு பதறுகிறது:
மதுராந்தகம் அருகே: தம்பரம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, மது அருந்திவிட்டுத் துரத்திய கும்பலால் ஏரிக்கரைக்குக் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதில் கைதானவர்களில் ஒருவன் அரசியல் கட்சியின் உள்ளூர் பிரமுகர் என்பதுதான் வேதனை.
சேலம் கொடூரம்: 66 வயது முதியவர் என்றும் பாராமல் ஒரு கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
அயனாவரம்: சென்னையில் ஏழு வயதுச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டல் தலைநகரையே அதிர வைத்துள்ளது.
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறதா?
"தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது" எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஆளும் திமுக, இந்தக் கோரச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? ஒவ்வொரு முறை குற்றம் நடக்கும்போதும் 'கஞ்சா வேட்டை' எனப் பெயரளவில் ஒரு ரெய்டு நடத்துவதும், பிறகு அதுவே நீர்த்துப் போவதும் வாடிக்கையாகிவிட்டது.
விளாத்திகுளம் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரிடம் முறையிட்ட பிறகே முறையாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகக் கிளம்பும் தகவல்கள், தமிழகக் காவல்துறை தன்னாட்சியாகச் செயல்படுகிறதா அல்லது ஆளுங்கட்சியின் நிழலில் இயங்குகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
நடவடிக்கை எப்போது?
முன்பெல்லாம் குற்றம் நடந்தால் போலீஸ் தேடும். இப்போது பிணம் கிடைக்கும்வரை போலீஸ் காத்திருக்கிறது. கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் புழக்கம் பட்டிதொட்டியெங்கும் பரவிக் கிடப்பதுதான் இத்தகைய வக்கிரக் குற்றங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனச் சொல்லிக்கொள்ளும் 'திராவிட மாடல்' அரசு, புள்ளிவிவரங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சாமானியப் பெண்களுக்கு வீதியில் இறங்கி நடக்கும் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், 'விடியல்' என்பது வெறும் விளம்பர வாசகமாக மட்டுமே எஞ்சி நிற்கும்!












Click it and Unblock the Notifications