மகளிர் உரிமைத்தொகை.. ரூ.1000 யாருக்கெல்லாம் வழங்கப்படும்? SMS அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க.. குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இச்செய்தி, அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் உதவித்தொகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது.

ரூ.1 ரூபாய் அனுப்பும் பணி
முழுமையான உதவித்தொகை அனுப்பப்படுவதற்கு முன், பல பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் சரிபார்ப்புத் தொகையாக அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறை, விண்ணப்பதாரர் வழங்கிய வங்கிக் கணக்கு தகவல்கள் சரியானவை மற்றும் செயல்படுபவை என்பதை உறுதி செய்வதற்காகும். இந்த சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பின்னர் வரும் 13ம் தேதி முழு ஆயிரம் ரூபாயும் வரவு வைக்கப்படும். பணப் பரிமாற்றம் தோல்வியடைவதைத் தவிர்த்து, ஒவ்வொரு ரூபாயும் சரியான நபருக்குச் சென்றடைவதை உறுதி செய்ய இது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் இதில் விண்ணப்பங்களை செய்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சோதனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எப்போது பணம் அனுப்பப்படும்?
அரசின் அதிகாரபூர்வ வட்டாரங்களின்படி, புதிதாக அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இந்த மாதம் 13 ஆம் தேதி முதன்முறையாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். ஏற்கனவே பயனடைவோருக்கு வரவு வைக்கப்படுவது போலவே, இந்தப் பணமும் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். தகுதியுள்ள எந்தப் பெண்ணும் விடுபட மாட்டார்கள் என்றும், உரிய சரிபார்ப்புக்குப் பிறகு மேலும் பல விண்ணப்பதாரர்களைச் சேர்க்கும் செயல்முறை தொடரும் என்றும் மாநில அரசு உறுதியளித்துள்ளது.
குறுஞ்செய்தி எதுவும் இதுவரை பெறாத பெண்கள் அடுத்த 24 மணி நேரம் காத்திருக்குமாறு அரசு வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன. அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு இருக்கலாம். தேர்வான சிலருக்கு தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாக மெசேஜ்கள் வரலாம். தேவைப்பட்டால், குறிப்பிட்ட உள்ளூர் வருவாய் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நிலைமையைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாகும். இது குடும்பத் தலைவியாக உள்ள பெண்களுக்கு நிதிச் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் அளிக்கிறது. குடும்பச் செலவுகளை ஆதரிப்பதோடு, குடும்பங்களைச் சிறப்பாக நிர்வகிக்கவும் பெண்களுக்கு உதவுகிறது. புதிய பயனாளிகள் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்நாட்டில் மேலும் பல பெண்கள் இந்த மாதாந்திர நிதி உதவியால் பயன் அடைவார்கள்.
இந்த நிதி ஆதரவு லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். உறுதிப்படுத்தும் குறுஞ்செய்திகளைப் பெற்ற பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாதம் தங்கள் வங்கிக் கணக்குகளில் உதவித்தொகை வரவு வைக்கப்படுவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications