'பவர்ஃபுல்' தமிழ்நாடு.. கண்ணுக்கு தெரியாமல் நடந்த பெரிய மாற்றம்! அசத்துதே!
சென்னை: தமிழ்நாடு மின்சாரத்துறை வரலாற்றில், சூரிய மின்சக்தி உற்பத்தியில் ஒரு மாபெரும் சாதனை நடந்திருக்கிறது. தமிழகம் புதிய மைல் கல்லை எட்டியிருக்கிறது.
டிச.23ம் தேதியன்று, தமிழகம் தனது மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய சக்தியின் பங்களிப்பை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தி சாதனை படைத்துள்ளது.

அதாவது சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கப்படும் மின்சாரம், நேரடியாக மாநிலத்தின் TNEB உடன் இணைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வீடுகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படும். அந்த வகையில், டிச.23 அன்று சுமார் 50.8 மில்லியன் யூனிட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
இது மிகப்பெரிய அளவு மின்சாரமாகும். தமிழ்நாட்டின் மொத்த மின்சார தேவையில் 15% ஆகும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில், தமிழகத்தின் மின் தேவையில் 6ல் ஒரு பங்கு சூரிய ஒளி மூலம் பெறப்பட்டிருக்கிறது.
அதேபோல அன்றைய தினம் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை, வெறும் இரண்டு மணி நேரத்தில் சூரிய ஒளி மூலம் மட்டும் 7,276 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த அளவு மின்சாரத்தை கொண்டு மொத்த சென்னைக்கும் 2-3 மணி நேரம் வரை மின்சாரத்தை கொடுக்க முடியும்.
பருவமழை முடிந்து, வானிலை சீராக இருந்ததால், சோலார் பேனல் மூலம் இந்த அளவுக்கு மின்சாரத்தை உருவாக்க முடிந்தது என்று மின்சார வாரியம் கூறுகிறது. அதேபோல இந்த மின்சாரத்தின் அளவு அதிகம் என்பதால், அதை முழுமையாக பயன்படுத்தும் விதமாக, நிலக்கரி உள்ளிட்ட மற்ற மின்சாரத்தை குறைத்துக்கொண்டு, சூரிய மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சூரிய மின்சாரம்தான் எதிர்காலம் என்கிற வகையில் உலக நாடுகள் அதில் தங்கள் முதலீடுகளை அதிகரித்திருக்கின்றன. நிலக்கரியை எரிப்பதன் மூலம் மின்சாரம் கிடைத்தாலும், அதில் கரியமில வாயு அதிக அளவில் வெளியேறு பூமி சூடாகிறது.
இதனால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, புதிய புதிய நோய்கள் உருவாகின்றன. எனவே இந்த பிரச்சனையை தவிர்க்க, சூரிய மின்சாரத்தை நாடியிருக்கின்றனர். அந்த வகையில் தமிழ்நாடும் தற்போது சூரிய மின்சாரத்தை நோக்கி முன்னேறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications