அப்படி போடு.. 16% வளர்ச்சியை பதிவு செய்த தமிழ்நாடு.. நம்பர் 1 நாமதான்.. கர்நாடகா, மகாராஷ்டிரா ஷாக்
சென்னை: இந்தியாவில் மிக வேகமாக வளரும் மாநிலங்களில் நம்பர் 1 இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. ஜிடிபி அளவில் மிக வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
இந்திய மாநிலங்களுக்கான ரிசர்வ் வங்கியின் சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மாநில பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழ்நாடு இந்தியாவின் வலிமையான, அத்துடன் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதைக் காட்டுகின்றன.

தமிழ்நாடு நம்பர் 1 - மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி
2024-25 நிதியாண்டில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பெருக்கம் மற்றும் தனிநபர் வருமான உயர்வு ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு பெரும்பாலான பெரிய மாநிலங்களை மிஞ்சுகிறது.
தற்போதைய கணக்குப்படி தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது. 2021-22ஆம் நிதியாண்டில் ₹20,72,49,579 லட்சமாக இருந்தது, 2022-23இல் ₹23,72,46,927 லட்சமாகவும், 2023-24இல் ₹26,88,96,324 லட்சமாகவும் அதிகரித்தது. 2024-25ஆம் ஆண்டுக்கான மதிப்பீடு ₹31,18,59,030 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அண்மைக் காலங்களில் காணப்படும் வலுவான வளர்ச்சிப் போக்கைப் பிரதிபலிக்கிறது.

தமிழ்நாடுதான் வேகமாக வளர்கிறது
வளர்ச்சி விகிதத் தரவுகளில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. 2022-23இல் 14.5%, 2023-24இல் 13.3% என வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு, 2024-25இல் 16% ஆக உயர்ந்துள்ளது. பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய மாநிலங்களில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். அதாவது பெரிய மாநிலங்களில் மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
மற்ற முக்கிய மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன: மகாராஷ்டிரா (2022-23: 15.8%, 2023-24: 11.4%, 2024-25: 11.7%); உத்தரப் பிரதேசம் (13.2%, 15.1%, 12.7%); கர்நாடகா (16.4%, 10.2%, 12.8%); குஜராத் (14.7%, 10.1%, 10.2%). வரும் நிதியாண்டில் 16 சதவீத இலக்கைத் தாண்டிய ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே, இது அதன் தெளிவான பொருளாதார வேகத்தை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம்
தனிநபர் வருமான எண்களும் இந்த உயர்வுப் போக்கை பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2021-22இல் ₹2,42,339 ஆகவும், 2022-23இல் ₹2,75,272 ஆகவும், 2023-24இல் ₹3,13,329 ஆகவும் பதிவாகியுள்ளது. 2024-25இல் இது ₹3,61,619ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை விட தமிழகத்தை தனிநபர் வருமானத்தில் முன்னணியில் நிறுத்துகிறது. எனினும், கர்நாடகா இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதில் தமிழ்நாடு கர்நாடகா இடையே மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் இருந்தது. அதை தமிழ்நாடு குறைத்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் அடுத்த வருடம் தமிழ்நாடு இந்த வேறுபாட்டை அப்படியே குறைக்கும்.
இந்த ஒட்டுமொத்த தரவுகள், மொத்தப் பொருளாதார உற்பத்தியின் நிலையான விரிவாக்கம் மற்றும் வருமான மட்டங்களின் வலுவான மேம்பாடு காரணமாக தமிழ்நாடு ஒரு உயர் வளர்ச்சி கட்டத்தில் நுழைந்துள்ளதைக் காட்டுகின்றன. மொத்த GSDP அளவில் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், தமிழ்நாடு வேகமாக வளர்ந்து, இந்தியாவின் மிகவும் ஆற்றல்மிக்க மாநிலப் பொருளாதாரங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications