டாஸ்மாக் மதுக்கடை மூடப்படுகிறது.. வரும் 2ம் தேதி மொத்த பார்களையும் இழுத்து பூட்டுங்க! அரசு அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது; மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களின் ஆட்சியர்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டை மதுவிலக்கு என்பது கனவாகவே கலைந்து, காற்றில் கரைந்து வருகிறது.. மாறாக, டாஸ்மாக்குகள் மூலம், தமிழக அரசுக்கு ஏகப்பட்ட வருவாய் கிடைத்து வருகிறது..

அதாவது, அரசுக்கு வரும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருகிறதாம்..
மதுக்கடைகள் மூலம் வருவாய்
தமிழகத்தில் கிட்டத்தட்ட 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இவைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45000 கோடி வரை வருமானம் கிடைப்பதாகவும், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், படிப்படியாக மூட வேண்டும் என்று நீதிமன்றம் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.. சமீபத்தில் வழக்கு ஒன்றில் ஹைகோர்ட் தன்னுடைய கருத்தை கூறியிருந்தது.
படிப்படியாக டாஸ்மாக் மூடல்
அதில், "நீதிமன்றம் மதுக்கடைகளை பொதுமக்களுக்கு இதுபோல இடையூறு ஏற்படாமல் பார்ப்பது மாநிலத்தின் கடமை.. இந்திய அரசமைப்பு சட்டப்படி, ஊட்டச்சத்து தரத்தையும், வாழ்வின் தரத்தையும் உயர்த்துவதும், சுகாதாரத்தை மேம்படுத்துவதும் மாநிலத்தின் முதன்மையான கடமையாக கருத வேண்டும்..
மக்கள் நல அரசானது, ஒருபுறத்தில் அதிக மருத்துவமனைகளை நிறுவி, மறுபுறம் ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை நிறுவுவது முரண்பாடானது.. அரசியலமைப்போடு இது ஒத்துப்போவதில்லை. எனவே, பொது சுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முழுமனதுடன் மக்கள் நல அரசு பாடுபட வேண்டும். மதுவிலக்கை படிப்படியாக மெதுவாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
காந்தி ஜெயந்தி
இந்நிலையில், காந்தி ஜெயந்தி வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடுப்படுவது வழக்கமாகும்..
அந்தவகையில், வருகிற 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மூடப்பட உள்ளது.. இதுகுறித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுமே அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மூடப்பட வேண்டும் டாஸ்மாக்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 251எல் (ஏ) ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்.எல்.1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும்.
மேலும், அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), எப்.எல்.3 (ஏஏ) முதல் எப்.எல்.11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications