அதிகாரிகள் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்களா? தவெக அரசுக்கு சிபிஎம் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை கண்காணிக்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கை தொடர்பாக ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும், இதற்கு முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சிபிஎம் பொதுச்செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் வந்த இரு உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. முதலில் கல்லூரி கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை.. அதில் இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள், கரப்பான் பூச்சி ஜனதா உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்காமல் இருப்பதை கல்லூரி நிர்வாகம், பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tamil Nadu Student Protest CPM TVK Government Vijay

சர்ச்சை

அதேபோல திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் முகவரிகளை சேகரிக்க உத்தரவிட்டிருந்தார். அதுவும் ஒரே நாளில் இது குறித்த விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என அவர் கூறியிருந்தார். இந்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கடும் எதிர்ப்புக்கு பிறகே இந்த உத்தரவுகளை தமிழக அரசு திரும்ப பெற்றது.

சண்முகம் கண்டனம்

இதற்கிடையே தமிழ்நாட்டின் ஆளும் தவெக அரசை கண்டித்து சிபிஎம் பொதுச்செயலாளர் சண்முகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தமிழ்நாடு அரசு ஒடுக்க பார்க்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுபோன்ற உத்தரவுகளை வெளியிட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "போராடுவது என்பது இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமை. மாணவர்களும் அந்த உரிமை இருக்கிறது. கல்வி உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக மாணவர்கள் போராடுவது அவர்களது ஜனநாயக உரிமை. மாணவர்கள் தங்களுடைய கல்வி உரிமைக்காகவும் கல்வி துறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஊழல் மோசடிக்கு எதிராகவும் போராட வேண்டியது அவர்களுடைய கடமை.

ஏற்க முடியாது

அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களிலும் மாணவர்கள் போராடி கொண்டிருக்கிறார்கள். விடுதலை போராட்ட காலத்திலும் கூட கல்லூரி பள்ளியை விட்டு வெளியே வர வேண்டும் என்று மகாத்மா காந்தி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று விடுதலைக்காக மாணவர்கள் போராடிய வரலாறு கொண்டது இந்தியா. அப்படியிருக்கும் போது போராட்டத்துக்கு செல்லக்கூடிய மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதை ஏற்க முடியாது.

மேலும், மாணவர் அமைப்புகளில் பாஜக, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அமைப்புகளும் செயல்பட்டு வரும் நிலையில், இடதுசாரி மாணவர் அமைப்புகளை மட்டும் குறிப்பிட்டு கண்காணிக்க உத்தரவிடுவது உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. சட்டசபையில் இதுகுறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர், சுற்றறிக்கையில் பொருத்தமற்ற சில வார்த்தைகள் இடம்பெற்றுவிட்டதாகவும், அவை தேவையற்றவை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இது தெரியாமல் நடந்த தவறு எனக் கூறுவதை ஏற்க முடியாது.

நடவடிக்கை தேவை

கடும் எதிர்ப்புக்குப் பிறகு சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையிலான சட்டம்-ஒழுங்கு கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதில் தொடர்புடைய அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியரும் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார். சிபிஎம், சிபிஐ ஆகியவை என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? அவற்றின் உறுப்பினர் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியருக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவர் விளைவுகளை தெரிந்தே இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த விவகாரத்தில் வட்டாட்சியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இடமாற்றத்தை தண்டனையாக கருத முடியாது.

முதல்வர் என்ன செய்கிறார்?

நடக்கும் சம்பவங்களை எல்லாம் இணைத்து பார்த்தால்.. அதிகாரிகள் முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்களா என்றே கேள்வி எழுந்துள்ளது. அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கான பொறுப்பு இறுதியில் அரசையே சேரும் என்பதால் முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் நிர்வாகத்தை உரிய முறையில் கட்டுப்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறாமல் கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+