மின்சார வாரியம் அதிரடி.. துண்டு துண்டா சிதறி, தனியாருக்கு போகுதா? கோட்டைக்கு வார்னிங்.. யார் பாருங்க
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தை பிரித்து, தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக மின்சார வாரியத்திற்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், மின்சார வாரியமான Tangedco அமைப்பினை, 3 பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பல மாதங்களாகவே, தகவல் வெளியாகி வருகிறது. கடன் நிலைமையை நிர்வகிப்பதற்காகவே, இப்படி 3 ஆக பிரிக்கப்படுவதாகவும் காரணம் சொல்லப்படுகிறது.

2ஆக பிரிப்பு?: அதாவது, மின் உற்பத்தி, விநியோகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்றவற்றை பிரத்யேகமாக கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை உள்ளதால், தமிழக அரசு இந்த முடிவில் உள்ளதாக தெரிகிறது. நேற்றைய தினம், தமிழ்நாடு மின்சார வாரியம் 2ஆக பிரிக்கப்பட்டு உள்ளதாகவும், இனி மின்சார வாரிய பணிகள் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் என்றும் மீண்டும் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தனியாருக்கு மின்வாரியத்தை தாரைவார்க்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள சுருக்கம் இதுதான்:
மின்கட்டணங்கள்: "திமுக அரசு பதவியேற்ற 32 மாத காலத்தில், ஏற்கெனவே இரண்டு முறை மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. இப்போது மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியால் மீண்டும் மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் தலையில்தான் விடியும். பல ஆண்டுகளாக, லட்சக்கணக்கான மின் ஊழியர்களின் உழைப்பால் உருவான தமிழ் நாடு மின்சார வாரியத்தின் உட்கட்டமைப்பு மற்றும் அதன் சொத்துக்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் நிலை உருவாகும்.
ஏற்கெனவே, விடியா திமுக அரசில் மின்சார வாரிய பணியாளர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகள், பதவி உயர்வு, பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு, புதிய பணி நியமனங்கள் மற்றும் பதவி அனுமதிகள் யாவும் அரசின் ஒப்புதலுக்குப் பிறகே பரிசீலிக்கப்படும் என்று விடியா தி.மு.க. அரசு அறிவித்துள்ளதாகவும், துணை மின் நிலையங்களை Outsourcing என்கிற பெயரில் தனியாருக்கு விடியா தி.மு.க. அரசு தாரை வார்த்துள்ளதாக தொழிற்சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
திமுக ஆட்சி: அதுபோலவே, விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்து 32 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில், மின்சார வாரியத்தில் இதுவரை கருணை அடிப்படை நியமனங்களைத் தவிர ஒரு பணி நியமனமும் செய்யப்படவில்லை. ஆனால், அம்மா ஆட்சியில் 2011 முதல் 2021 வரை காலிப் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலமும், கருணை அடிப்படையிலுமாக சுமார் 22,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், கேங்க்மேன்கள் நியமிக்கப்பட்டனர்.
இன்றைய தேதியில் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் 58,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன என்றும், குறைந்த அளவுள்ள தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் அதீத பணிச் சுமைகளைச் சுமக்க வேண்டி உள்ளதால், உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்கொலைகள்: அதிக வேலைப் பளு காரணமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பணியாளர்களில் சிலர், தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
"தன்னாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் நாடு அரசின் பொதுத் துறை நிறுவனம்" என்கிற மின்வாரியத்தின் அந்தஸ்தை விடியா தி.மு.க. அரசு சிறுகச் சிறுக பறித்து, படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது என்று தொழிற்சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர். மைனாரிட்டி திமுக ஆட்சி 2006-2011ல் பல மின் உற்பத்தி நிலையங்களை பழமையானவை எனக் காரணம் காட்டி மூடியதாகவும், புதிய மின் உற்பத்தித் திட்டங்களையும் அப்போதைய தி.மு.க.
திமுக அரசு: அரசு நடைமுறைப்படுத்தத் தவறியதால், கடந்த 2009-க்குப் பிறகு ஒருநாளைக்கு 15 மணி நேரம் கடுமையான மின்வெட்டை தமிழகம் சந்தித்தது. 2011-ல் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் மின்வாரியத்தின் உற்பத்தித் திறன் பெருக்கப்பட்டு, மின்வெட்டு முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, தமிழ் நாடு மின்மிகை மாநிலமாக விளங்கியது.
இந்நிலை 2021 ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்தது. விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 2021 மே மாதம் மீண்டும் மின்வெட்டை தமிழக மக்கள் சந்தித்தனர்.
இந்நிலையில், மீண்டும் விடியா தி.மு.க. அரசு மறுசீரமைப்பு என்கிற போர்வையில் மின்வாரியத்தை பல கூறுகளாகத் துண்டாடி கொஞ்சம் கொஞ்சமாக மின் உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்கும் நோக்கத்தில், தமிழ் நாடு மின்சார வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்க எத்தனித்துள்ளது என்று தொழிற்சங்கங்கள் புகார் கூறுகின்றன.
எச்சரிக்கிறேன்: ஆகவே, மறுசீரமைப்பு, செலவுகளை சிக்கனப்படுத்துதல் மற்றும் மனித சக்தியை ஒழுங்குபடுத்துதல் என்கிற போர்வையில், மின் வாரியத்தை பல கூறுகளாகத் துண்டாடி, படிப்படியாக மின்சார வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் எண்ணத்தை தி.மு.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மேலும், மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்." என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications