அரசு ஊழியர்களுக்கு ஒரே கவலை.. தீபாவளி அட்வான்ஸ் கிடைக்குமா? இன்னும் ஒரு மாதம் தானே இருக்கு!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டபடி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதுவரை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதே நேரத்தில், அக்டோபர் முதல் வாரத்திலேயே தீபாவளி முன்பணத்தை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை அரசு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அறிவிப்பு இல்லாததால், அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே நேரத்தில் அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அரசு ஊழியர்கள்
அந்த வகையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களுக்காக பண்டிகை முன்பணம் 10,000லிருந்து 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவது, அரசு ஊழியர்களின் குழந்தைகளின் திருமணத்திற்கு முன்பணம் 20,000லிருந்து 5 லட்சம் ஆக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றதோடு ஜூன் மாதத்தில் இதற்கான அரசாணை வெளியானது. தற்போது ஒரு சில அரசு துறைகளுக்கு மட்டும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் நிலையில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் தான் வழங்கப்படுகிறது.
பண்டிகை முன்பணம் உயர்வு
இதற்காக அரசு ஊழியர்களுக்கு என்று பிரத்தியேகமாக களஞ்சியம் செயலி செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் களஞ்சியம் செயலியில் தீபாவளி முன்பணத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் முதல் வாரத்தில் முன்பணம் கிடைத்தால் தான் தீபாவளியைக் கொண்டாட முடியும் என கூறுகின்றனர் ஆசிரியர்கள்.
தீபாவளி முன்பணம்
ஆனால் இதுவரை தமிழக அரசின் நிதித்துறை சார்பில் இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டால் தான் தற்போது விண்ணப்பித்திருக்கும் ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரம் என்ற பழைய முன்பணம் தான் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு அறிவித்தபடி 20 ஆயிரம் ரூபாய் என்ற புதிய அறிவிப்பின்படி முன்பணம் ஒதுக்கப்படவில்லை.
தமிழக அரசு அறிவிப்பு
தற்போது நிதி ஒதுக்கீடு செய்தால் தான் அக்டோபர் முதல் வாரத்தில் தீபாவளி முன்பணத்தை வழங்க முடியும். எனவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து உயர்த்தப்பட்ட 20 ஆயிரம் ரூபாய் முன்பணத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் தற்போது நிதி ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் முதல் வாரத்திலேயே ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications