வீடுகளில் சோலார் பவர் அமைக்க விரும்புவோருக்கு ஆஃபர்.. அனைத்து கட்டணங்களும் ரத்து- மின்வாரியம் முடிவு
சென்னை: வீடுகளில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்படுவதை ஊக்குவிக்க, விண்ணப்ப கட்டணம், மின் இணைப்பு கட்டணம் உள்ளிட்ட பல வகை கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க, தமிழ்நாடு அரசின் மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு உட்பட நாடு முழுதும் வீடுகளில் மின் கட்டண செலவைக் குறைக்க, பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. வீடுகளின் மின்சாரத் தேவையைப் பூா்த்தி செய்வதுடன், மரபுசாரா எரிசக்தி உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கில் மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து, கூடுதல் மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு கடந்த மாதம் தொடங்கியது. இதன் மூலமாக, 3 கிலோ வாட் மின் நிலையம் அமைத்தால், 1 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் வரும் மார்ச் மாதத்திற்குள், 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை, வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தை மேலும் ஊக்குவிக்கவும், நுகர்வோரின் செலவைக் குறைக்கவும், சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கு, பல்வேறு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, விண்ணப்ப கட்டணம், இரு வழி மீட்டர் செலவு, மின் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
மேலும், ஏற்கனவே உள்ள ஒருமுனை மின் இணைப்பை, மும்முனை இணைப்பாக மாற்றும் கட்டணம், மின் சுமை அல்லது மின் தேவையை, 10 கிலோ வாட் வரை உயர்த்துவதற்கான கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட உள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததும், இந்த கட்டண விலக்கை உடனே செயல்படுத்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, அதிகமானோர், சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
