வேலையை காட்டும் தவெக அரசு.. இனி டைமுக்கு பஸ் வராது! போக்குவரத்து கழகங்களின் புது திட்டம்
சென்னை: எரிபொருளை சேமிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் தமிழகம் முழுவதும் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் அரசு பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் பஸ்ஸுக்காக மக்கள் தவம் கிடக்கிறார்கள். அதிலும் பீக் அவர்ஸ் என்று சொல்லப்படும் காலை 8-10 மாலை 5-9 ஆகிய நேரங்களில் பஸ்கள் போதுமான அளவுக்கு இயக்கப்படுவதில்லை என்று பயணிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

லாப நோக்கம்
கிராமப்புறங்களில் நிலைமை வேறு. அங்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் இருக்கும். மற்ற நேரங்களில் பெரியதாக பயணிகள் இருக்க மாட்டார்கள். ஆனால், குறைந்த பயணிகளுக்காக பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டுதான் வருகின்றன. தனியார் பேருந்துகள் இப்படி இயக்கப்படாது. ரூட்டில் போதிய அளவுக்கு வசூல் இல்லை என்று தெரிந்துவிட்டால் அந்த வழித்தடத்தில் பேருந்துகள் ஓடாது. தற்போது இதே பாணியைத்தான் அரசு பேருந்துகள் கடைபிடிக்க திட்டமிட்டிருக்கின்றன.
பேருந்துகள் குறைப்பு
இதற்காக அனைத்து மண்டலங்களிலும் பேருந்துகளை குறைப்பதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டிருக்கின்றன. முதற்கட்டமாக விழுப்புரம் மண்டலத்தில் பேருந்து சேவைகள் குறைக்கப்பட இருக்கின்றன. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 136 புறநகர் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து குறைவாக உள்ள செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளில் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் எரிபொருள் செலவு கணிசமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாற்று ஏற்பாடு
மறுபுறம் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள், முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பயணிகள் இருப்பார்கள். எனவே அதற்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இந்த ஐடியா ஓகே போலத்தான் தெரியும்.
அரசு சேவைகள் எந்த அளவுக்கு தரமாக இருக்கும் என்பதற்கு தமிழ்நாடு மிகச்சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது. ஒரே ஒரு மாணவருக்காக அரசு பள்ளியை இயக்கிய பெருமை நம்முடையது. இப்படி இருக்கையில், அரசு பஸ்களை லாபத்துக்காக குறைப்பது என்பது எப்படி சரியாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக சிஐடியு தொழிற்சங்கத்தினர், அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
