அனல் காற்று வீசும்... வெயில் சுட்டாலும் அப்பப்போ லேசா மழை பெய்யும் - வானிலை மையத்தின் அறிவிப்பு
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. பல மாவட்டங்களில் அனல் காற்று வீசுகிறது. தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மதுரை, ஈரோடு, கொடைக்கானலில் இரவு நேரங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஏப்ரல் 5ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
பிற்பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணி பெண்கள் மதியத்திற்கு மேல் வெளியே செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

27 மாவட்டங்களில் அனல்
ஏப்ரல் 6ஆம் தேதி வரை வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 27 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

மக்கள் கவனத்திற்கு
ஏப்ரல் 5ம் தேதியன்று கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள், வேட்பாளர்கள், காவல்துறையினர் வெளியில் இருந்து பணிகள் செய்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான மழை
தமிழகத்தில் விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். நாளை முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை காணப்படும்.

வெப்பநிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தாம்பரம், சென்னை மீனம்பாக்கம் பகுதிகளில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மீனவர்கள் கவனத்திற்கு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு 45 மணி முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications