ஒரே ஒரு வீடியோ! இந்திய ட்ரெண்டிங்கில் தமிழிசை! நேஷனல் நியூஸ் ஆக்கிய எதிர்க்கட்சிகள்!
சென்னை: அமித்ஷாவின் ஒரே ஒரு வீடியோ மூலம் தமிழிசை செளந்தரராஜன் இந்திய அளவில் தலைப்புச் செய்தியாக மாறி இருக்கிறார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட செய்திதான் தலைப்புச் செய்தியாக வந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாகத் தமிழிசை செளந்தரராஜன் ட்ரெண்டிங் ஆகிவிட்டார்.

நாயுடுவின் பதவியேற்பு விழாவுக்குச் சென்றிருந்த தமிழிசை மேடையிலிருந்த பாஜக மூத்த தலைவர்களுக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் செல்லிக் கொண்டே நடந்தார்.
அப்போது வெங்கையா நாயுடுவைப் பார்த்து வணங்கிய தமிழிசை, அடுத்ததாகப் பக்கத்தில் அமர்ந்திருந்த அமித்ஷாவைப் பார்த்து வணக்கம் வைத்தார். மேடையில் அமர்ந்திருந்த அவர், மரியாதை நிமித்தமாக மறுபடியும் வணக்கம் வைத்திருக்க வேண்டும். அதுதான் மேடை நாகரிகம்.
ஆனால், ஏதோ அரங்கத்திற்குள் நடக்கின்ற கட்சி செயல்வீரர்கள் கூட்டம் என நினைத்துக் கொண்ட அமித்ஷா, கண்டிப்புடன் கூட தோரணையில் தமிழிசையை அமைத்தார்.

உடனே அவர் அமித்ஷா அருகில் சென்று ஏதோ விளக்கம் அளித்தார். அதைக் காதில் வாங்கிக் கொள்வதற்கு முன்பே கண்டிப்பான முகபாவத்துடன் தமிழிசையிடம் சைகை செய்தார்.
அவரது முகத்தில் கோபம் தெரிந்தது. கூடவே கூடாது என்பது போல் அவரது உடல்மொழி இருந்தது. குளோஸ் அப் ஷாட்டில் அந்த வீடியோவை யாரோ சமூக வலைத்தளத்தில் அடுத்த நொடியிலேயே பரப்பினார்கள்.
உடனடியாக அந்த வீடியோவை முன்வைத்து தமிழ்நாட்டில் தமிழிசை Vs அண்ணாமலை மோதல் குறித்துத்தான் அமித்ஷா பேசி கண்டித்திருக்கிறார். அவர் அண்ணாமலை ஆதரிக்கிறார் என்பது போன்ற ஊகங்கள் வெளியாகின.
நாயுடுவின் பதவியேற்பு விழா முடிந்து தமிழிசை சென்னை திரும்புவதற்கு அமிஷா கண்டித்த வீடியோ ட்ரெண்டிங் ஆகிவிட்டது. ஆகவே, சென்னை விமானநிலையத்திலிருந்து வெளியே வந்த தமிழிசையைப் பார்த்து பத்திரிகையாளர் ஒருவர், “Everything is fine Akka?” என்றார்.

மற்றொரு பத்திரிகையாளர் நேரடியாகவே, “அமித்ஷா என்ன அக்கா சொன்னார்? வீடியோ பார்த்தீங்களா?” என்றார். அதற்கும் தமிழிசை முகத்தில் கொஞ்சம் கூட கோபத்தைக் காட்டாமல் தான் கலகலப்பாக இருப்பதைப் போன்று ஒருவருக்கும் பதிலளிக்காமல் காரில் ஏறி கதவைச் சாத்திக் கொண்டு புறப்பட்டார்.
இந்தச் சர்ச்சை தொடர்பாகக் கேரள காங்கிரஸ் தான் முதல் எதிர்வினையைப் பதியவைத்தது. அக்கட்சி வெளியிட்ட பதிவில், “பாஜகவின் கலாச்சாரம் இதுதான். பெண்களின் மீதான அவர்களின் அணுகுமுறையும் இதுதான். சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தக்க பதிலடி அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும்.
அவர் பாஜகவைவிட்டு வெளியேற வேண்டும். நீங்கள் ஒரு மருத்துவர், முன்னாள் ஆளுநர். குற்றப் பின்னணி கொண்டவரிடம் இருந்து இதுபோன்ற அவமதிப்பைச் சகித்துக் கொள்ளக் கூடாது” என்றது.
அதன்பின்னர் தமிழ்நாட்டில் திமுக ஐடி விங், 'இதுதான் பாஜகவின் பண்பாடு’ என்று தமிழிசைக்குத் துணையாக நின்று பேசியது.
பொதுவாக இதைப் போன்ற விவகாரங்களில் அது அவர்களின் உட்கட்சி பிரச்சினை என்று கடந்துவிடுவார்கள். ஆனால், இந்த விசயத்தில் திமுக ஐடி விங் அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் கார்டு போட்டு செய்தியைப் பகிர்ந்தது.
அண்ணாமலைக்கும் தமிழிசைக்குமான கருத்து மோதல் என்பது அதுவரை தமிழக அளவிலான செய்தியாகவேதான் இருந்தது.

அமித்ஷா வீடியோ வெளியானதற்குப் பிறகு அதைத் தேசிய ஊடகங்கள் கவனப்படுத்தும் அளவுக்குத் தலைப்புச் செய்தியானது. டைம் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், தி எக்னாமி டைம்ஸ், பிசினஸ் டுடே, தி இண்டியன் எக்ஸ்பிரஸ், தி ஃபினாசியல் எக்ஸ்பிரஸ், தி இந்து, இன்டியா டுடே என பல ஆங்கிலப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின.
அவர் கடந்த 12 ஆம் தேதியிலிருந்து ஹாட் நியூஸ் ஆனார்.
இந்த விசயத்தில் அரசியல் ரீதியாகப் பார்த்தால் தமிழிசைக்கு நல்ல மைலேஜ் கிடைத்துள்ளது. அண்ணாமலையோ, தமிழக பாஜகவோ இது பற்றி எதையும் சொன்னதாகத் தெரியவில்லை.
இன்னும் சொல்லப் போனால் கலகலப்பாக விமானநிலையத்தில் காட்சி கொடுத்த தமிழிசை அப்போதே இதற்கு அவரது பாணியில் ரைமிங் ஆகவும் டைமிங்க் ஆகவும் பதிலளித்திருந்தால், விஷயம் சூடேறி இருக்காது.
அவரும் இதில் அமைதி காத்துவிட்டார். அதன்பின்னர் செய்தி பரபரப்பாக ஆக மாறிவிட்டதை உணர்ந்து தமிழிசை செளந்தரராஜன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு விளக்கமளித்திருந்தார்.
அதில், “பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமித்ஷாவை நான் அன்றுதான் முதன்முதலாகச் சந்தித்தேன். அவர் தமிழ்நாட்டில் பாஜக எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிக் கேட்டார். தொகுதி பணிகளில் தீவிரம் காட்டும்படி அக்கறையுடன் அறிவுரை கூறினார். தேவையற்ற ஊகங்களைப் பரப்பி வருபவர்களுக்கு இதனைத் தெளிவுபடுத்துகிறேன்” என்று கூறியிருந்தார்.
ஆனால், ஊகங்களைக் கிளப்பியது ஊடகங்கள் இல்லை. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள். அவர்கள் இதைக் கண்டிப்பதற்கு முன்பே இவர் விளக்கம் அளித்திருக்கலாம்.
மேலும் தமிழிசைக்கு ஆதரவாக நாடார் சங்கங்கள் களத்தில் குதித்து சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு முன்பே இவர் பேசி இருக்கலாம்.
அவரது அமைதி பல ஊகங்களை உண்டாகி விட்டது. கூடவே அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகிவிட்டார். ஆங்கில ஊடகங்களின் கவனம் இவர் மீது விழும் அளவுக்கு வைலராகிவிட்டார்.












Click it and Unblock the Notifications