கூட்டணிக்கு வந்துருங்க விஜய்.. 15 சதவீதம் வாங்கினாலும் யூஸ் இல்லை.. திடீர் அழைப்பு கொடுத்த தமிழிசை
சென்னை: விஜய் மீது தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு 15 சதவீதம் வாக்கு இருந்தாலும் அது பூஜ்ஜியமாக மாறிவிடும். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் கூட்டணி உறுதியாக இருக்க வேண்டும். உதிரியாக இருக்க கூடாது என்றும் தமிழிசை பேசியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி தனித்துவிடப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என தனது முதல் மாநாட்டிலேயே அறிவித்த விஜய், தற்போது வரை கடையை திறந்து வைத்து இருக்கிறார்.

தனித்து விடப்பட்ட விஜய்?
ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் விஜய்யை சீண்டவில்லை. காங்கிரஸ் கட்சியும் விஜய்க்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருக்க வரும் தேர்தலில் தனித்து போட்டி என்ற மனநிலைக்கே விஜய் வந்துவிட்டதாக தெரிகிறது. 234 தொகுதிகளுக்கும் விஜய் விருப்பமனுவை வாங்கி வருகிறார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் அதிமுக கூட்டணியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுக தலைமை கனவு கண்டது. இதை வைத்தே விஜய்க்கு ஆதரவாக அதிமுக தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால் சமீபத்தில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விஜய் கடுமையாக விமர்சித்தார். மேலும், எவ்வளவு அழுத்தம் வந்தாலும் அடிபணிந்து போக மாட்டேன்.
விஜய்யை கூட்டணிக்கு அழைத்த தமிழிசை
கொள்கை எதிரியுடன் கூட்டணி கிடையாது என்று விஜய் அறிவித்தார். அதிமுக - பாஜகவை விஜய் விமர்சிக்க தொடங்கிய நிலையில், பதிலுக்கு அதிமுகவும் விஜய்யை ரவுண்ட் கட்ட தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
பாஜகவும் தங்கள் பங்கிற்கு விஜய்யை கடுமையாக தாக்கி பேசி வருகிறது. இந்த நிலையில்தான், தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், விஜய்யின் தவெகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், " திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் சேரணும்.
15 சதவீதம் விஜய்க்கு இருந்தாலும்
அரசியல் கூட்டணி வேறு.. கொள்கை கூட்டணி வேறு என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். விஜய்க்கு 15 சதவீதம் வாக்கு இருந்தாலும் அது பூஜ்ஜியமாக மாறிவிடும். திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறீர்கள். இன்னொரு 30 - 40 சதவீதம் இருக்கும் கட்சிகள் கூட இந்த 15 சேர்ந்தால் எவ்வளவு ஆகும் என்பதை விஜய் சிந்திக்க வேண்டும். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் கூட்டணி உறுதியாக இருக்க வேண்டும். உதிரியாக இருக்க கூடாது" என்று கூறினார்.
விஜய் மீது தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications