வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்! அசத்தல் அறிவிப்பு!
சென்னை: வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 2024-2025 வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர் இந்த அசத்தல் அறிவிப்பையும் வெளியிட்டார். பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் இந்த புதிய மானியத் திட்டம் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் மானியம் வழங்குவதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது;
''வேளாண் தொழிலை மேற்கொள்ள இளைஞர்களிடம் ஆர்வம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இளைஞர்கள்தான் எந்த ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் முதுகெலும்பாவர். வேளாண் சார்ந்த தொழில்களின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்பதால், 2021-2022-ஆம் ஆண்டு முதல் 268 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, அக்ரி கிளினிக் உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களைத் தொடங்கி நடத்தி வேளாண்மைக்கு வலுசேர்த்து வருகின்றனர். ''
''வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட நம்முடைய அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குமேல் சன்ன ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு 107 ரூபாயும், சாதாரண இரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு 82 ரூபாயும் ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ''
''கடந்த ஆண்டு, 45 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பயறுவகைகள், கொப்பரைத் தேங்காய் ஆகியவையும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதால் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர். ''
''கடந்த பத்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலிருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டிலும் மேலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.''












Click it and Unblock the Notifications