எம்எல்ஏ அப்படி சொன்னதுதான் மிச்சம்! கிசுகிசுத்த முதல்வர் ஸ்டாலின்! வெடித்து சிரித்த அவை! என்னாச்சு?
சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பற்றி திமுக எம்எல்ஏ கம்பம் என் ராமகிருஷ்ணன் இன்று பேசிய சில விஷயங்கள் சட்டசபையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபையில் இன்று முல்லைப்பெரியாறு அணை விவகாரம் மற்றும் வழக்கு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதில் வாதம் வைக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவது எப்படி என்று விவாதிக்கப்பட்டது.
அதேபோல் அணை பாதுகாப்பு சட்டம் காரணமாக முல்லைப்பெரியாறு அணை கட்டுப்பாடு எப்படி பாதிக்கப்படும் என்று விவாதிக்கப்பட்டது.

கம்பம் என் ராமகிருஷ்ணன்
இந்த விவாதத்தில் திமுக எம்எல்ஏ கம்பம் என் ராமகிருஷ்ணன் தனது பேச்சில் தென் மாவட்ட மக்கள் சார்பாக பென்னிகுவிக் அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 152 அடி நீர் மட்ட உரிமையை நாம் 1979ல் இழந்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும். அது வலிமை இழந்துவிட்டதாக கேரளாவில் கிளர்ச்சி எழுந்தது. அணை வலிமையாக இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டாலும் நீர் மட்டம் உயர்த்தப்படவில்லை. அங்கு புதிதாக அணை கட்ட முடியாது என்று ஆய்வில் சொல்லப்பட்டாலும் கேரளா அரசு இதை விடுவதாக இல்லை.

முல்லைப்பெரியாறு அணை
இதற்காக கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் மூலம் 6 மராமத்து பணிகளை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 136 அடிக்கு மேல் உயர்த்த கூடாது என்று கேரளாவில் ஒரு வழக்கு போடப்பட்டது.. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் 2006 136க்கு மேல் உயர்த்தும்படி வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது திமுகவின் முயற்சியால் இரண்டு வேறு வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜாங்க மூவ்
அது மிகப்பெரிய ராஜாங்க ரீதியான மூவ். அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் இந்த சிறப்பான முடிவை எடுத்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அதன் மூலம் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த வல்லுனர் குழுதான் கடைசியாக வந்த தீர்ப்பிற்கு மூல ஆதாரம் என்பதை மறக்க வேண்டாம் என்று எம்எல்ஏ கம்பம் என் ராமகிருஷ்ணன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

வயது என்ன
நீர் வளத்துறை தீபாவளி எல்லாம் கொண்டாடாமல்.. தீபாவளி அன்று கூட இந்த அணை விவகாரத்திற்காக அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கு 84 வயதாகிறது.. இதிலும் அணை விவகாரத்தில் துடிப்பாக இருக்கிறார் என்று எம்எல்ஏ கம்பம் என் ராமகிருஷ்ணன் தனது பேச்சில் குறிப்பிட்டார். இதையடுத்து அப்பாவு.. போதும் உரையை முடிக்கலாமே என்றார். இதற்கு ராமகிருஷ்ணன், ஒரே ஒரு நிமிஷம்.. இப்போது துரைமுருகன் எவ்வளவு வலிமையாக, தெளிவாக இருக்கிறார்.

அணை வலிமை
அவர் கட்டுமஸ்தாக.. வலிமையாக.. திடமாக இருக்கிறார். அப்படித்தான் முல்லைப்பெரியாறு அணை இருக்கிறது. அவருக்கு இடையில் உடல்நிலை சரியில்லை. மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டார். அதேபோல் அணைக்கும் பராமரிப்பு பணிகள், மராமத்து பணிகள் செய்யப்பட்டு, திடமாக வைக்கப்பட்டு உள்ளது. அணை வலிமையாக இருக்கிறது என்று திமுக எம்எல்ஏ கம்பம் என் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

சிரிப்பு
இதை கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. அங்கேயே துரைமுருகன் காதில் ஏதோ கிசுகிசுத்தபடி சிரித்தார். இதை கேட்டு துரைமுருகனும் வாயை மூடிக்கொண்டு சிரித்தார். துரைமுருகன் வயதை பற்றி சொன்னதும் அங்கு இருந்த அன்பில் மகேஷ் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும் வாய் விட்டு சிரித்தனர். துரைமுருகன் இடையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications