என்னங்க இது.. அடங்கி போன அமமுக.. ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை.. டிடிவி தினகரன் ஏமாற்றம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனும் கோவில்பட்டி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வகித்த நிலையில் இவிஎம் வாக்குகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 152 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 81 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

தினகரன்
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு அடுத்து அமமுக அதிகம் கவனம் பெற்றது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் அரசியலில் இருந்து "ஒதுங்கி" இருக்க போவதாக சசிகலா அறிவித்தார். இருந்தாலும் தினகரன் நம்பிக்கையோடு தேர்தலை சந்தித்தார். முக்கியமாக அதிமுக வாக்குகளை அமமுக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி கட்டம்
அதிலும் கடைசி கட்டத்தில் அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. இதனால் ஜாதி ரீதியான வாக்குகள், சசிகலா ஆதரவு, அதிமுகவிடம் இருந்து பிரியும் வாக்குகள் என்று அமமுகவிற்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல இடங்களில் அமமுக கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்பு
ஆனால் தற்போது நிலவரப்படி அமமுக தமிழகத்தில் எங்கும் முன்னிலை வகிக்கவில்லை. கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு எதிராக டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார். தபால் வாக்குகளில் முன்னிலை வகித்த தினகரன் தற்போது இவிஎம் வாக்குகளில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கடம்பூர் ராஜு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். கடம்பூர் ராஜு இங்கு முன்னிலை வகிக்கிறார். இதனால் தினகரன் வெற்றிபெறுவாரா, ஒரு இடத்தையாவது அமமுக பெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் எங்கும் முன்னிலை வகிக்கவில்லை.

பின்னடைவு
வேறு எந்த தொகுதியிலும் அமமுக முன்னிலை வகிக்கவில்லை. பல தொகுதிகளில் அமமுக மொத்தமாக அடங்கி போய் உள்ளது. நாம் தமிழர் மூன்றாம் இடம் பிடித்துள்ள நிலையில், அமமுக "சீனிலேயே" இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அமமுக மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த கட்சி பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications