கூட்டணி முறிந்தால் விஜிலென்ஸ் வரும்.. இங்க எல்லாருக்கும் பயம் இருக்கு.. அண்ணாமலை பேச்சு டிரெண்டிங்
சென்னை: அதிமுக- பாஜக கூட்டணி முடிந்துவிட்டதாக அதிமுக தலைவர்கள் கூறிய நிலையில், முன்பு கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் இப்போது டிரெண்டாகி வருகிறது.
அதிமுக பாஜக இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கூட்டணி தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக- பாஜக கூட்டணி முடிந்துவிட்டதாக அதிமுக தலைவர்கள் நேற்று கூறினர்.

இது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மற்ற பாஜக தலைவர்கள் கருத்து கூறினாலும், அண்ணாமலை இது தொடர்பாக இதுவரை எதுவும் கூறவில்லை.
அண்ணாமலை: இதற்கிடையே அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு சிவி சண்முகம் பேச்சுக்குப் பதில் அளிக்கும் வகையில் பேசியது இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில், "கூட்டணியில் சலசலப்பு எதுவும் இல்லை. கூட்டணியின் தேவை அனைவருக்கும் தெரியும்.. இங்கேயும் டிவிஏசி இருக்கிறது. இங்கேயும் விஜிலென்ஸ் துறை இருக்கிறது. அனைவருக்கும் இங்கே பாதுகாப்பு தேவைதானே..
தனி மரம் என்றும் தோப்பாகாது.. கூட்டணி அனைவருக்கும் தேவைதான்.. முன்பு இருந்தது போல பெரும் தலைவர்கள் இருந்த காலம் இல்லை இது. எனவே இப்போது அனைவருக்குமே கூட்டணி தேவை இருக்கிறது. அதேநேரம் டிவிஏசி (தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை) மீதும் இங்கே அனைவருக்கும் பயம் இருக்கிறது.
டிவிஏசி: நான் யாரையும் மிரட்டவில்லை. டிவிஏசி எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் முதல்வரும் இல்லை... எனக்குக் கூட்டணி வேண்டாம் என்பது என்ன பேச்சு. இது என்ன போக்கு.. கூட்டணி வேண்டாம் என யாரும் சொல்ல முடியாது. தனிமரம் தோப்பாகாது. அனைவரையும் அரவணைத்தே செல்ல வேண்டும். எல்லாருக்கும் எல்லாரும் தேவை. தனி மரத்தை வைத்துக் கொண்டு இருப்பேன் என்றால் புயல் வரும் போது இந்த தனிமரம் தான் காணாமல் போகும்.
இங்கே அனைவருக்கும் அரசியல் பிரச்சினை இருக்கு. நாங்கள் இல்லையென்றால் மற்றொருவர் திமுகவை விமர்சனம் செய்ய இருக்கிறார்கள். இங்கே ஒருவரை ஒருவர் அனுசரித்தே செல்ல வேண்டும். கூட்டணி வேண்டாம் எனச் சொல்லும் அளவுக்குத் தமிழ்நாட்டில் எந்தவொரு பலசாலியையும் நான் பார்க்கவில்லை. நான் யாரையும் நிர்ப்பந்தம் செய்யவில்லை. அவர்கள் சொன்னதற்குப் பதிலை மட்டுமே சொல்கிறேன்.. கூட்டணி வேண்டாம்.. எங்கள் தயவில் தான் வென்றார்கள் என்பதெல்லாம் என்ன பேச்சு..
தன்மானம்: ஏன் பாஜக தொண்டர்கள் வேலை செய்யவில்லையா.. அவர்கள் களத்திற்குச் செல்லவில்லையா.. வெற்றி, தோல்வி எல்லாம் அடுத்தது தான்.. முதலில் தன்மானம் தான் முக்கியம்.. தன்மானம் இல்லாமல் வெற்றி கிடைத்து என்ன பயன். தன்மானத்தோடு அரசியல் செய்தால் மட்டுமே நமது இலக்கு சரியாக இருக்கும். நமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. இதுதான் பாஜகவின் நிலைப்பாடு. இந்த தரக்குறைவான பேச்சை ஆரம்பித்தது யார்.. செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் ஆகியோர் என்ன பேசினார்கள்.
பாஜகவிலும் இப்படிப் பேச ஆட்கள் இருக்கிறார்கள்.. இதைவிட மோசமாகப் பேச ஆட்கள் இருக்கிறார்கள்.. நான் கண்டு கொள்ளாத மாதிரி இருக்கிறேன் என்றால் அவர்களும் பேசுவார்கள். எது பேசுவதாக இருந்தாலும் நேராகப் பேச வேண்டும். வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும். தனிமனிதர்களைக் கேவலப்படுத்திச் சிறுமைப்படுத்தக் கூடாது. இங்கேயும் நான் சொன்னால் அப்படிப் பேச ஆட்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் நான் அப்படிச் செய்ய மாட்டேன். சும்மா மேடை இருக்கு.. மைக் இருக்கு என இப்படி எல்லாம் பேசக் கூடாது.
லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வரவில்லை.. இப்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், அதில் என்ன அறிவிப்பு வரும் என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும். சூழல், அரசியல் தன்மை மாறுகிறது. இங்கே கூட்டணியில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.. நானும் எடப்பாடியும் போனில் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications