துபாய் பயணம் பற்றி சர்ச்சை கமெண்ட்.. 100 கோடி இழப்பீடு கேட்ட திமுக.. அண்ணாமலை பதில் என்ன தெரியுமா?
சென்னை: முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலைக்கு எதிராக திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அந்நிய முதலீடுகளை ஈர்க்க 4 நாட்கள் அரசு முறை பயணமாகத் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். நேற்று துபாய் எக்ஸ்போவை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
மேலும், இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அமீரகத்தின் பல முக்கிய அமைச்சர்கள், முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் துபாய் எக்ஸ்போவில் உள்ள தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைத்தார். முன்னதாக அமீரக அமைச்சர்களையும் அவர் சந்தித்தார். ஏற்கனவே லூலூ குழுமம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த பயணத்தில் தமிழ்நாட்டிற்கான மேலும் பல்வேறு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பர்-1 தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி எடுத்துச் செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பயணம் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பாஜக தலைவர் அண்ணாமலை
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வரின் இந்த பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். துபாயில் தமிழ்நாடு அரங்கைத் திறந்துவைக்க ஏன் இவ்வளவு பணம் எனக் கேள்வி எழுப்பிய அண்ணாமலை, சொந்த முதலீட்டைச் செய்வதற்காக திமுக இந்த பயணத்தை மேற்கொள்கிறதா என்றும் எழுப்பி உள்ளார். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வரின் இந்த பயணத்தை விமர்சித்துள்ள அண்ணாமலையின் இந்த கருத்திற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திமுக நோட்டீஸ்
இந்த விவகாரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இல்லாவிடில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், மன்னிப்பு கோராவிட்டால் அண்ணாமலை 100 கோடி ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையைத் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை பதிலடி
இந்நிலையில், அண்ணாமலை இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டரில், "100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மான நஷ்ட ஈடு வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

என் போராட்டம் தொடரும்
திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்... துணிவுடன். மக்கள் துணையுடன்" என்று பதிவிட்டுள்ளார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விவகாரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வாய்ப்பில்லை என்பதைக் கூறியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications