அமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்
சென்னை: பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவை தமிழகத்திற்கு அழைத்துவந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனித்து வருகிறது தமிழக பாஜக.
தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், தலைவர்களும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டதால் தமிழகத்திற்கு வர அமித்ஷா தேதி கொடுப்பார் என பாஜக நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வியூகம்
தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்கான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் முன்பைக் காட்டிலும் தீவிரப்படுத்தியுள்ளது அக்கட்சியின் தேசியத் தலைமை. இதற்காக பல வியூகங்களை வகுத்து அதன்படி செயல்படுமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோபம்
திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸை தலையில் வைத்து கொண்டாடுவதாகவும், ஆனால் அதிமுகவோ கூட்டணிக்கட்சியான பாஜகவை ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை எனவும் தமிழக பாஜகவினர் தொடர்ந்து டெல்லியில் முறையிட்டு வந்தனர். இதனால் அதிமுக மீதும் அமித்ஷாவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது உண்மை.

தனி குழு
இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பாக கண்காணிக்க தனி குழுவை ஆர்.எஸ்.எஸ்.மூலம் நியமித்து ஆதாரங்களையும் விவரங்களையும் திரட்டி வருகிறது பாஜக.

பொறுமை
அதிமுகவை மட்டுமே நம்பினால் பலனில்லை என்பதை உணர்ந்த பாஜக தேசியத் தலைமை, பாஜகவை பலப்படுத்தி அதன் தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசித்துள்ளது. ஆனால் அது உடனடியாக சாத்தியமாகாது என தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு தகவல் அனுப்பப்பட்டதால் பொறுமை காக்கிறது.

தேதி கேட்பு
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷாவை தமிழகத்திற்கு அழைத்து வந்து சென்னையிலோ, திருச்சியிலோ பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதற்காக அவரிடம் தேதி கூட ஏற்கனவே கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியில் இணைப்பு
அமித்ஷா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இங்கு வரும் போது, திமுக, அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரை அவர் முன்னிலையில் பாஜகவில் சேர்க்க ரகசிய திட்டம் வைத்துள்ளனர் தமிழக பாஜக முன்னணி நிர்வாகிகள். இதற்காக ஏற்கனவே அவர்கள் பேசி முடித்துவிட்டதாகவும், யார் என்பது குறித்த தகவல் சஸ்பென்சாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications