நீட் பாதிப்பே முடியல.. அடுத்து ‘NExT’? “உடனே கைவிடுங்க” - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை : NExT எனப்படும் தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வை திமுக அரசு எதிர்த்து வரும் நிலையில், தற்போது, மத்திய பாஜக அரசு நெக்ஸ்ட் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வை கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், NExT தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications