"தலித் கட்சியென முடக்க முடியாது".. பொதுத்தொகுதிகளில் வென்று ஜாதிகளை முறியடித்த திருமா.. விசிக மாஸ்
சென்னை: தமிழகத்தில் 2 பொதுத்தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் முன்னிலை பெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாஸ் காட்டியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. 234 தொகுதிகளுக்குமான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை வெளியாகி உள்ள முன்னணி நிலவரங்களின்படி திமுக கூட்டணி 156 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதிமுக கூட்டணி 78 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுகவின் வெற்றி இந்த தேர்தலில் உறுதியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக சிறப்பாக செயலாற்றி உள்ளது. திமுகவின் கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

முன்னிலை
4 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் இருப்பதால் கிட்டத்தட்ட விசிக வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. அதன்படி திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ், காட்டுமன்னார் கோயில் (தனி) - சிந்தனை செல்வன், செய்யூர் (தனி) - பனையூர் பாபு ஆகிய தொகுதிகளில் விசிக முன்னிலை வகிக்கிறது.

சிறப்பு
இதில் 2 தனி தொகுதிகளிலும், 2 பொது தொகுதிகளிலும் விசிக முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் தலித் மக்கள் வாக்குகள் மட்டுமின்றி மற்ற சாதியினரின் வாக்குகளையும் வெல்ல முடியும் என்று விசிக நிரூபித்துள்ளது. ஜாதி கடந்து விசிகவிற்கு ஆதரவு உள்ளது என்பதை டாக்டர் எம்பி திருமாவளவன் நிரூபித்துள்ளார்.

சின்னம்
அதிலும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் புதிய சின்னமான பானை சின்னத்தில் விசிக போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ளது. குறைந்த நாட்களில் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, பொது தொகுதியில் வெற்றிபெறும் அளவிற்கு விசிக தேர்தல் பணிகளை மிக சிறப்பாக செய்துள்ளது. முழுக்க முழுக்க அந்த கட்சியின் உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம்.

டிவிட்
இது தொடர்பாக டிவிட் செய்துள்ள எம்பி திருமாவளவன், 2 பொதுத் தொகுதி, 2 தனித்தொகுதி. விசிகவிற்கு 67% வெற்றி. வெறுப்பு அரசியலைத் தகர்த்தெறிந்து வெல்லும் விடுதலைச்சிறுத்தைகள். தலித் கட்சியென முத்திரை குத்தி சுருக்கி முடக்கி தனிமைப்படுத்த முயன்றோரின் சதியை முறியடித்தது பானை. இது சிறுத்தைகளின் #வரலாற்றுச்_சாதனை. வழக்கம்போல ஊடகங்கள் இருட்டடிப்பு.

வெற்றி
போட்டியிட்ட 6 இடங்களில் 4இல் விசிக வெற்றிமுகம். 67% வெற்றி. தனி சி்ன்னம். புதிய சின்னம். 14 நாட்கள் இடைவெளியில் அறிமுகமான சின்னம். விடுதலைச் சிறுத்தைகளின் பானை சின்னம். சாதி-மதவெறியர்கள் பரப்பிய அவதூறுகளை நொறுக்கித் தவிடு பொடியாக்கிவிட்டு வெற்றி இலக்கை எட்டுகிறது பானை.

பெரிய பங்கு
தமிழக தேர்தல்களத்தைச் சனாதன சக்திகளுக்கு எதிராகத் திருப்பியதிலும் தலித்மக்களைப் பெருவாரியாக அதிமுக பாஜக அணிக்கு எதிராகத் திரட்டியதிலும் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு முதன்மையானது! சனாதனிகளை வீழ்த்துவதும் விரட்டியடிப்பதுமே, என்று திருமா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications