"கனவில் கூட நடக்காது".. அதிமுகவின் எதிர்பார்க்காத எழுச்சியால்.. நொறுங்கிய பாஜக மனக்கோட்டை.. பின்னணி!
சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கிட்டத்தட்ட 76 தொகுதிகளில் தனியாக முன்னிலை வகித்து வருகிறது... இத்தனை இடங்களில் அதிமுக முன்னிலை பெற்று இருப்பது திமுகவிற்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்குமோ அதே அளவிற்கு பாஜகவிற்கும் இது அதிர்ச்சியான செய்திதான்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் நிலவரம் திமுகவிற்கு சாதகமாகவே உள்ளது.
147 இடங்களில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 86 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

பாஜக
இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று பாஜக தீவிரமாக கவனித்து வந்தது. அதிமுக இதில் எத்தனை இடங்கள் பெரும் என்பதை பொறுத்தே பாஜகவின் எதிர்காலம் இருந்தது. ஒரு மாநிலத்தில் இருக்கும் பெரிய கட்சியோடு கூட்டணி வைத்து, அந்த கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டு, அதே மாநிலத்தில் பெரிய கட்சியாக உருவெடுப்பதுதான் பாஜகவின் அரசியல் ஸ்டைல்.

பாஜக ஸ்டைல்
பல மாநில கட்சிகளை பாஜக இப்படி காலி செய்து இருக்கிறது. பல மாநிலங்களில் பெரிய கட்சியாக இருந்த மாநில கட்சிகளோடு கூட்டணி வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பின் அதே மாநில கட்சிகளை ஓரம்கட்டுவதுதான் பாஜகவின் அரசியல் ஹிஸ்டரி. அதே ஸ்டைலைதான் தமிழகத்திலும் செயல்படுத்தும் திட்டத்தில் பாஜக இருந்தது.

இரண்டாவது பெரிய கட்சி
எப்படியாவது அதிமுகவோடு இணைந்து அதிக இடங்களை பெறலாம் என்று நினைத்தது. அதேபோல் அதிமுக 60க்கும் குறைவான இடங்களில் வென்றால், அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டிவிட்டு தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கலாம், பிரதான இரண்டாவது கட்சியாக உருவெடுக்கலாம் என்று பாஜக திட்டமிட்டது.

மனக்கோட்டை
ஜெயலலிதா இல்லை, இதனால் வலிமை இல்லாத அதிமுகவிற்கு பதில் பாஜகவை முன்னிறுத்தலாம் என்று அக்கட்சி மனக்கோட்டை காட்டியது. ஆனால் பாஜகவே எதிர்பார்க்காத அளவிற்கு இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. அதிமுக கூட்டணி 85 இடங்களிலும் அதிமுக தனியாக 76 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

அதிமுக பலம்
இதனால் திமுக இல்லையென்றால் அதிமுகதான்.. அதிமுக இல்லையென்றால் திமுகதான் என்று நிலைமையே தமிழகத்தில் தொடர்வது உறுதியாகி உள்ளது. அதாவது திராவிட கட்சிகளை மக்கள் எந்த வகையிலும் ஓரம்கட்டவில்லை என்ற உறுதியாகி உள்ளது. அதிமுகவின் பலம் கிட்டத்தட்ட தமிழகத்தில் அப்படித்தான் இருக்கிறது.

பாஜக கனவு
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக - அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் 3%தான். திமுக 37% அதிமுக 34% வாக்குகள் பெற்றுள்ளது. இதனால் அதிமுகவை ஓரம்கட்டிவிட்டு அந்த இடத்தை பிடிக்கலாம் என்று பாஜகவின் கனவு கலைந்துள்ளது. தமிழகத்தில் திமுகவிற்கு எதிராக பாஜகவை கொண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.

மதிப்பு உள்ளது
அதிமுக மீதான மதிப்பு இன்னும் இருக்கிறது. அந்த கட்சி இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. இதனால் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக வளர்வது எல்லாம் இப்போதைக்கு தமிழகத்தில் சாத்தியமே இல்லை. தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை தேர்வு செய்ய இப்போதைக்கு வாய்ப்பே இல்லை என்பதைதான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன












Click it and Unblock the Notifications