தமிழகத்திலும் கால் வைத்தது கொரோனா.. ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 45 வயது நபருக்கு சிகிச்சை
சென்னை: தமிழகத்திலும் கொரோனா வைரஸ் கால் பதித்துள்ளது. ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
சீனாவில் இருந்து துவங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், பல்வேறு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்த அளவில் இந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி 31 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தை பொருத்த அளவில் இதுவரை யாருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் ஒரு பதிவை இன்று இரவு வெளியிட்டிருந்தார்.
அதில் அவர், ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அந்த நபர் உடல் நிலை சீராக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தமிழக சுகாதாரத்துறை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
#COVID19 positive for 45Y male who traveled from Oman.Due to d stringent screening process,we identified & isolated the Pt for further treatment @ RGGH Chennai. Pt is stable &under hospital observation,#TNHealth is fully functional to combat d situation. Pls avoid state of panic
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 7, 2020
முதன்முதலாக தமிழகத்திலும் கொரோனா கால் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே லடாக் யூனியன் பிரதேசத்தில் இருவர், தமிழகத்தில் ஒருவர் என, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 34 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications