1.5 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஆர்டர்.. 18 வயதை தாண்டிய அனைவருக்கும் இலவசம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாக 1.5 கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 45 வயதுக்கு மேற்பட்ட 14 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

மத்திய அரசு அனுமதி
மேலும், தற்போது வரை கொரோனா தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் மாநில அரசுகளே நேரடியாக கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாநிலங்களும் தடுப்பூசிகளுக்கு காத்திருக்காமல் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை விரைவில் பெறலாம்.

இலவசமாகப் போடப்படும்
இந்நிலையில், தமிழக அரசு முதல்கட்டமாக சுமார் 1.5 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என இந்தியாவிலேயே முதலில் அறிவித்த மாநிலம் தமிழ்நாடு. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகிறது. இதுவரை (27.04.2021), 55.51 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலமைச்சர் உத்தரவின் பேரில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு ஆர்டர்
இதற்கென, முதற்கட்டமாக 1.5 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலமாகக் கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில், அதற்கு பதிவு செய்யும் முறை கோவின் தளத்தில் இன்று தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications
